டுரின்: இத்தாலியின் டுரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஏடிபி டென்னிஸ் காலண்டர் ஆண்டின் கடைசி கட்டத்தில் நடத்தப்படும் ஏடிபி பைனல்ஸ் போட்டிகள், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நடப்பாண்டில் சிறப்பாக ஆடி முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற முடியும். இந்நிலையில் நேற்று நடந்த குரூப் ஸ்டேஜ் டென்னிஸ் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜேனிக் சின்னர், கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அலிஸிமே உடன் மோதினார்.
முதல் செட்டில் இருவரும் ஈடுகொடுத்து ஆடியதால் அந்த செட்டை கைப்பற்றுவதில் போட்டி நிலவியது. கடைசியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் அந்த செட்டை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டில் எவ்வித போட்டியும் தராமல் ஃபெலிக்ஸ் சரண்டர் ஆனதால், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் எளிதில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட்களில் அவர் வெற்றி வாகை சூடினார்.
