வளிமண்டல கீழடுக்கு, மேலடுக்கு சுழற்சி தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளைதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ மழை வடதமிழகத்தில் தீவிரமாகவும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக தீவிரமாகவும் இருந்தது. வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மன்னார்குடியில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 10 செ.மீ, வேப்பூர், நெய்வேலி, மீ மாத்தூரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.