சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாக இருந்ததை அடுத்து, அனேக இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 130 மிமீ மழை பெய்துள்ளது. இது மேகவெடிப்புக்கு இணையானதாக கணிக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி 120 மிமீ, திருச்சி 90 மிமீ, பொன்மலை 80 மிமீ, பெரம்பலூர் 70 மிமீ, சேலம், குப்பநத்தம், வாடிப்பட்டி, கிருஷ்ணகிரி, சமயபுரம், கல்லக்குடி 60 மிமீ மழை பெய்துள்ளது.
வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் வெயில் இயல்பைஒட்டி இருந்தது. இந்நிலையில், தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி வரை இதேநிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.