மதுரை: மதுரையில் ஏடிஎம் மையத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் எரிந்து சாம்பலானது. மதுரை, கீரைத்துறை அருகே புது மாகாளிப்பட்டி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. நேற்று காலை இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென புகை வௌியானது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து ஏடிஎம் இயந்திரம் மற்றும் அறை முழுவதும் எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இருப்பினும் ஏடிஎம் இயந்திரம், அதனுள் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் மைய அறை முற்றிலும் எரிந்து நாசமானது. ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் ஏடிஎம் மையம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தெற்குவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.