யற்கை நுண்ணறிவால் இயங்கும் அட்லஸ் என்னும் புதிய வெப் பிரவுசரை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் குரோம் போன்ற உலகின் பிரபலமான வெப் பிரவுசர்களுக்கு சவால்விடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய OpenAI, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளை தேடி வருகிறது. உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமை போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய ‘அட்லஸ்’ என்னும் வெப் பிரவுசரை OpenAI சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் இதுகுறித்து பேசுகையில், சாட்ஜிபிடியின் வாராந்திர ஆக்டிவ் பயனர்கள் 800 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த பிப்ரவரியில் 400 மில்லியனாக இருந்ததாகவும் கூறினார்.
அட்லஸ் மூலம், பயனர்கள் இணையத்தில் எவற்றையெல்லாம் தேடுகிறார்கள் என்பது குறித்த தரவுகளை சேகரித்து, அவர்களின் இணைய வாழ்க்கையில் மேலும் பல பகுதிகளில் OpenAI விரிவடைய உள்ளது. வழக்கமான அட்ரஸ் பாரை (address bar) நீக்கி, ‘‘சாட்ஜிபிடியை மையமாக கொண்டு” அட்லஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். பயனர்கள் எந்த வலைப்பக்கத்திலும் சாட்ஜிபிடி சைட்பாரை திறந்து, உள்ளடக்கத்தை சுருக்கமாக அறியலாம். பொருட்களை ஒப்பிடலாம் அல்லது தரவை பகுப்பாய்வு செய்யலாம். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும்‘‘முகவர் பயன்முறை (Agent Mode)” வசதி மூலம், சாட்ஜிபிடியால் பயனர்களுக்காக இணையத்தில் தேடவும், வலைத்தளங்களுடன் தொடர்புகொள்ளவும் முடியும். இதன்மூலம், பயணத்தை திட்டமிடுவது, ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வேலைகளை சாட்ஜிபிடி செய்யும்.
இதனை விளக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், அட்லஸ் ஒரு சமையல் குறிப்பை கண்டுபிடித்து, இன்ஸ்டாகார்ட் (Instacart) மூலம் மளிகை பொருட்களை வாங்குவதை OpenAI டெவலப்பர்கள் காட்டினர். அதேபோல் எட்சி (Etsy), ஷாபிஃபை (Shopify) போன்ற மின்வணிக தளங்களுடனும், எக்ஸ்பீடியா (Expedia), புக்கிங்.காம் (Booking.com) போன்ற சேவைகளுடனும் இணைந்து செயல்பட உள்ளதாக OpenAI அறிவித்துள்ளது.‘‘அட்லஸ் போன்ற AI பிரவுசர்கள் மிகவும் வசதியானவை. பல இணைப்புகளை தேடி, எது பொருத்தமானது என்று பார்க்க வேண்டியதில்லை. இப்போது வலைப்பக்கங்களின் சுருக்கத்தை எளிதாக பெறலாம்” என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு நிறுவன தலைவர் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். ஆனால், அவை எந்த அளவுக்கு துல்லியமானவை என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘‘இந்த புதிய வகை AI பிரவுசர்கள், நம்பகமான வலைத்தளத்தில் இருந்து வந்த தகவலையும் நம்பத்தகாத மூலத்திலிருந்து வந்த தகவலையும் வேறுபடுத்த முடியாதது ஒரு முக்கிய சிக்கலாக அமையும்” என்பதையும் அவர் குறிப்பிட்டார். நிறுவனம், பயனர்கள் தங்கள் செயல்பாடுகளை கண்காணிக்கவும், தகவல்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறது. OpenAI, அட்லஸில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளதாக கூறுகிறது. ஆனால், பயனர்களுக்காக இணையத்தில் செயல்படும் முகவர் (Agent) அம்சம் இன்னும் சில அபாயங்களை கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறது. இந்த பாதுகாப்பு அம்சங்களின்படி, அட்லஸ் பிரவுசர் குறியீடுகளை இயக்கவோ, கோப்புகளை பதிவிறக்கவோ, பிற செயலிகளை அணுகவோ முடியாது. மேலும், வங்கிகள் போன்ற முக்கியமான வலைத்தளங்களில் தானாக இடைநிறுத்தப்படும்.
பயனர்கள் முகவரை லாக்-அவுட் முறையில் (logged-out mode) இயக்கிக்கொள்ளலாம். இதன்மூலம் அதன் செயல்பாடு வரையறுக்கப்படும். ஆனால், வலைப்பக்கங்கள் அல்லது மின்னஞ்சல்களில் மறைந்து இருக்கக்கூடிய தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் வழிமுறைகள் காரணமாக அபாயங்கள் உள்ளதாக ஓபன்ஏஐ எச்சரிக்கிறது. இவை எதிர்பாராத செயல்கள் அல்லது தரவு திருட்டுக்கு வழிவகுக்கலாம். விரிவான சோதனைகள் செய்து, பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்ந்து சரிசெய்து வருவதாக OpenAI கூறுகிறது. ஆனால், அதே சமயம் பயனர்கள் தங்கள் செயல்பாடுகளை கண்காணிக்கவும், தகவல்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்துகிறது. ‘‘நாம் நமது தனிப்பட்ட தகவல்களையும், பிரவுசிங் வரலாற்றையும், பயனர்களின் தனியுரிமையை மதிப்பதையும் அல்லது தரவை பாதுகாப்பதையும் இன்னும் நிரூபிக்காத ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம்.
இதனால், இதை முயற்சிக்கும்போது நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்கிறார் பேராசிரியர் எலெனா சிம்பர்ல். அட்லஸில் பிரவுசிங் மெமரி (Browsing Memory) என்ற அம்சமும் உள்ளது. இது, பயனர்களின் பிரவுசிங் வரலாற்றை நினைவில் வைத்துக்கொண்டு, கேட்டால் முந்தைய தேடல் விவரங்களை மீட்டெடுக்கும். ஆனால், OpenAI இதை முற்றிலும் தேர்வின் அடிப்படையில் செயல்படும் என்றும், பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளதாகவும் கூறுகிறது. உலகின் மிகவும் பிரபலமான பிரௌசரான கூகுள் குரோம் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் அட்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பதில்கள் மற்றும் பரிந்துரைகளை தேடும் பயனர்கள், சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகளை (LLMs) பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
அட்லஸ் இந்த போக்கை மேலும் வேகப்படுத்தக்கூடும், ஏனெனில், பயனர்கள் கூகுளின் பாரம்பரிய முறையிலான தேடல்களைவிட, தகவல்களை ஒருங்கிணைத்து வழங்கும் உரையாடல் கருவிகளையே விரும்புகின்றனர். ஆராய்ச்சி நிறுவனமான டாட்டோஸ் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 2025 நிலவரப்படி டெஸ்க்டாப் பிரவுசர்களில் நடைபெறும் தேடல்களில் 5.99% பெரிய மொழி மாதிரிகளுக்கு சென்றுள்ளது. இது, கடந்த வருடத்திலிருந்து இருமடங்கு அதிகம். ஆனால், கூகுளும் செயற்கை நுண்ணறிவில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக, அதன் தேடல் முடிவுகளில் AI உருவாக்கிய பதில்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த மாதம், கூகுள் தனது ஜெமினி (Gemini) என்ற AI மாதிரியை அமெரிக்க பயனர்களுக்கான குரோம் பிரவுசருடன் ஒருங்கிணைத்தது. விரைவில் ஐஓஎஸ் கிரோம் பயன்பாட்டிலும் அதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
‘‘புதிய OpenAI பிரவுசரை ஆரம்பத்திலேயே பலர் முயற்சித்து பார்க்க போகிறார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார் மூர் இன்சைட்ஸ் & ஸ்ட்ராட்டஜியின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாட் மூர்ஹெட். ‘’ஆனால், அட்லஸ், கிரோம் அல்லது மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு பெரிய சவாலாக அமையும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில், பெரும்பாலான பொது பயனர்கள் மற்றும் நிறுவன பயனர்கள் தங்களுக்கு பிடித்த பிரவுசர்களில் இதே அம்சங்கள் வரும்வரை காத்திருப்பார்கள்” என குறிப்பிட்டார். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ஏற்கனவே இதேபோன்ற பல அம்சங்களை வழங்குவதாகவும் மூர்ஹெட் குறிப்பிடுகிறார். போட்டி அதிகரித்து வந்தாலும், ஸ்டேட்கவுன்டர் தரவுகளின்படி, கூகுள் குரோம் இன்னும் உலகளாவிய பிரவுசர் சந்தையில் 71.9% பங்குடன் தனது முன்னிலை பதவியை தக்கவைத்துள்ளது. ஆனால், OpenAI..யின் புதிய பிரவுசர் விளம்பர வருவாய் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘‘ஒரு பிரவுசரில் உரையாடல் அம்சத்தை சேர்ப்பது OpenAI விளம்பரங்களை விற்பனை செய்வதற்காக எடுத்த முதல் படியாகும். இதுவரை OpenAI விளம்பரங்களை விற்கவில்லை. ஆனால், அது தொடங்கியவுடன், தேடல் விளம்பரங்களில் சுமார் 90% பங்கை வைத்திருக்கும் கூகுளின் சந்தையில் பெரும் பங்கை குறைக்க கூடும்” என்று டி.ஏ டேவிட்ஸன் நிறுவனத்தின் ஆய்வாளர் கில் லூரியா விளக்கினார். சாட்ஜிபிடி அட்லஸ் இப்போது ஆப்பிள் MacOS இயங்கு முறையில் Free, Plus, Pro, மற்றும் Go பயனாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இது தற்போது வணிக (Business) பயன்பாட்டிற்கான பீட்டா பதிப்பிலும் கிடைக்கிறது. மேலும், அவர்களின் பிளான் நிர்வாகி அனுமதித்தால், என்டர்பிரைஸ் மற்றும் எட்யூ பயனாளர்களுக்கும் கிடைக்கும். விண்டோஸ், ஐஓஎஸ், மற்றும் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய அம்சங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று OpenAI தெரிவித்துள்ளது.


