Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டு போட்டிகள்

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

அதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே 11 குழு வட்டார அளவில் நடந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்ற 307 பள்ளிகளை சேர்ந்த 661 மாணவர்களும், 651 மாணவிகளும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில், 100மீ, 200மீ, 400மீ, 600மீ, 800மீ, 1,500மீ மற்றும் 3,000மீ ஓட்டப்போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் 2 நாட்கள் நடக்கிறது.

போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சுகப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜோதிலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று நடந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 3,000மீ ஓட்டப்போட்டிகளில் முதலிடம் பிடித்த தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கிஷோர், இரண்டாம் இடம் பிடித்த பத்தியாவரம் செயிண்ட் ஜேசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நவீன், மூன்றாம் இடம் பிடித்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி யுவராஜ் மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான 3,000மீ ஓட்டப்போட்டிகளில் முதலிடம் பிடித்த செய்யாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பள்ளி தமிழ்செல்வன், இரண்டாம் இடம் பிடித்த திருவண்ணாமலை வி.டி.எஸ் ஜெயின் பள்ளி கோகுல், மூன்றாம் இடம் பிடித்த ஜவ்வாது மலை குனியாத்தூர் பழங்குடியினர் நலப் பள்ளி சிலம்பரசன் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுப்பயணத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.

அதன்படி, அரசு பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை நேற்று பார்வையிட்டனர். அப்போது, மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.