Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாயகம் திரும்பினார் விண்வெளி வீரர் சுபான்ஷூ : டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இந்தியாவின் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபூ, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சுபான்ஷூ சுக்லா இந்திய விமான படையில் பணியாற்றி வருகிறார்.இதைத்தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு ஜூன் 25ல் அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு டிராகன் விண்கலம் மூலம் புறப்பட்டனர்.

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 நாள் தங்கியிருந்து ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினார். அவரது பயணம் நாசா, ஸ்பேஸ்எக்ஸ், இஸ்ரோ மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தனியார் விண்வெளிப் பயண ஒத்துழைப்பான ஆக்ஸியம் மிஷன் 4 இன் ஒரு பகுதியாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா நேற்று அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பினார்.

இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியருமான சுக்லாவுக்கு, ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், மற்றும் அவரது மனைவி காம்னா மற்றும் மகன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.