அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்வார் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த விழாவில், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை, வெளியீடு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்று வழங்குதல் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மதம்பிடித்து, தமிழ்நாட்டின் கல்வியை அழிக்கத் துடிப்போரை அடக்குவதற்கான அங்குசம் தான் இந்த மாநிலக் கல்விக் கொள்கை. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொன்னார். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படக் கூடிய ரூ.2,600 கோடியை தருவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள்.
இரண்டாயிரம் கோடி அல்ல, நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று தைரியமாக சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எந்தவொரு மொழியாக இருந்தாலும், அதை கட்டாயப்படுத்தி திணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் இங்கே தொடங்கி வைத்த மொழி உரிமைப் போர், மகாராஷ்டிரா வரை பரவியது.
அங்கே நடந்த மிகப்பெரிய ஒரு போராட்டத்தால், அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற்றது. இப்படி எல்லா மாநிலங்களும் விழிப்புணர்வு பெறும்போது, ஒன்றிய அரசே மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும். இந்திய அரசியலமைச் சட்டத்தில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் ஒத்திசைவுப் பட்டியலில் சேர்த்தார்கள்.
இதனால்தான், தமிழ்நாட்டின் கல்வி உரிமையின் மீது பலமுனைகளில் இன்றைக்கு தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கான கல்வியை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம்’ என்ற மாநில உரிமையை நிலைநாட்ட, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான தொடக்கமாகத் தான், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். நீங்கள் படிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில் விளையாட்டிலும் தாராளமாக ஈடுபடுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் முதலமைச்சர் பார்த்து, பார்த்து செய்வார். கல்விக்கு ஏற்படும் எல்லா தடைகளையும் முதலமைச்சர் தகர்த்தெறிவார்.
தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை எனும் மகத்தான ஆவணத்தை தயாரித்துள்ள அந்த குழுவுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.