Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பேரவை தேர்தலை சந்திக்க கூட்டு பிரசாரம் பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு: போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் பேசியதாக தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் நேற்று சென்னையில் சந்தித்து பேசினர். அதிமுக - பாஜ கூட்டணி அமைந்தாலும் இன்னும் நிலையான ஒரு முடிவு எட்டப்படாமல் இழுபறியில் உள்ளது. பாஜ இந்த முறை அதிக இடங்களை கேட்டு பெறுவதில் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக, அதிமுகவுடன் கலந்து பேசவும், கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்கவும், பா.ஜ தேர்தல் வியூகத்தை வடிவமைக்கவும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து டெல்லி பாஜ உத்தரவிட்டது.

பாஜ சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தனர். தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் குறித்து நீண்டநேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது, கூட்டு பிரசாரம் செய்வது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, எவை என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பது குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜ மேலிட பொறுப்பாளர்கள் தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் சென்னை, ஆழ்வார்பேட்டை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் நேற்று காலை திடீரென சந்தித்து பேசினர். அப்போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார். அதிமுக தரப்பில், எடப்பாடியை தவிர வேறுயாரும் இல்லை.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி உறுதியாகியுள்ளது. தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அதிமுக - பாஜ தேர்தல் வியூகத்தை வடிவமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இரண்டு கட்சிகள் குறித்தும் விமர்சனத்தை முன்வைக்காமல் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோள் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும், அதிமுக - பாஜ கூட்டணியில் எத்தனை இடங்கள் இரண்டு கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் எவை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டம்தோறும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது, அதிமுக மாவட்ட தலைவர்கள் பாஜ தேர்தல் பிரசார பயணத்தில் இணைந்து கூட்டு பிரசாரம் செய்வது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.