சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்ட பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் சென்னை வருகை: மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இன்னும் 7 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளனர். பாஜ தொடர்ந்து புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அறிவித்துள்ளனர்.
இவர்களை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. அது தோல்வியில் முடிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை ஏற்றுக்கொள்வது என்பது தற்கொலைக்கு சமம். அவரை தோற்கடிப்பதே அமமுகவின் நோக்கம் என்று டிடிவி.தினகரன் அதிரடியாக கூறி வருகிறார். இதனால், எடப்பாடி இருக்கும் அணியில் டிடிவி.தினகரன் இணைவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் கூட்டணி விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார்.
மேலும் பாமகவையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாமகவே அப்பா, மகன் சண்டையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களும் இதுவரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்பி, இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதன்முறையாக நேற்று சென்னை வந்தனர்.
அவர்கள் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பாஜ தலைவர் நயினார் நாகேந்தின், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு சந்திப்பது. பாஜவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை?. ஒவ்வொரு தொகுதிகளிலும் பாஜவின் பலம் எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். அது மட்டுமல்லாமல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு எவ்வாறு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது. எவ்வளவு இடங்களை அவர்களிடம் கேட்டு பெறுவது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் தான் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். அதே நேரத்தில் பாஜ வேட்பாளர்களை இறுதி செய்து டெல்லி தலைமைக்கு அனுப்புவார்கள். அதன் பின்னரே யார் வேட்பாளர் என்பதை டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.