தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நவம்பர் புரட்சி தின பேரணி- பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி(எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதனை நாங்கள் ஏற்கவில்லை. ஆரம்பத்திலேயே எஸ்ஐஆர் தோல்வி அடைந்து விட்டது.
தமிழக முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவசர கதியில் எஸ்ஐஆர் புகுத்தும் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக முதல்வர் தலைமையிலான எங்களது கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. கூட்டணி மட்டுமல்ல, தமிழக மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை, ஜாதி-மதங்களால் பிளவுபடுத்துகின்ற எந்த கருத்தையும் ஏற்க மாட்டார்கள். திமுக கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் ஒற்றுமை கூட்டணி, அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற கூட்டணி. கொள்கை அளவில் உறுதியாக இருப்பது போல், தமிழக மக்களும் இருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதுமே நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள். எனவே, தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை பலமாக இருக்கிறது. ஆகவே, தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். கரூர் துவங்கி கோவை நிகழ்வு வரை தமிழக முதல்வர் உடனடியாக தலையீடு செய்கிறார். அதிகாரிகளை இயக்குகிறார். சட்டத்தின் முன் குற்றவாளிகளை கொண்டு வந்து நிறுத்தி, நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறார். தமிழக அரசு எப்பொழுதுமே நீதியின் பால், சட்டத்தின் பால் நிற்கிறது. எனவே, முதல்வரின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இவ்வாறு வீரபாண்டியன் தெரிவித்தார்.

