சட்டமன்ற தேர்தலில் சொத்துக்களை மறைத்ததாக எடப்பாடி மீதான வழக்கு நாளை விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, தேனியைச் சேர்ந்த இன்ஜினியர் மிலானி என்பவர், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள், வருமானங்கள் ஆகியவை குறித்த உண்மை தகவலை மறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவையும் பெற்றார். இதனால், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இந்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதுடன், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியது. இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஏற்கனவே, ஈரோடு கல்லூரி, சேலம், இடைப்பாடி சார்பதிவாளர்கள், நாமக்கல், சென்னை பதிவாளர்கள், இடைப்பாடி கனரா வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டி வைத்திருந்தனர்.
இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதித்ததுடன், சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கும், மனுதாரரான மிலானிக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதனால், 10 மாதத்திற்கு பிறகு, இந்த வழக்கு நாளை(18ம்தேதி) சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, தமிழக அரசும், மிலானியும் பதில் மனு தாக்கல் செய்கின்றனர். இதன் பிறகே விசாரணை தொடருமா? என்பது தெரியவரும்.


