Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் மின் தேவை 23,000 மெகாவாட்டாக உயரும்: புதிய திட்டத்துடன் தயாராகும் மின்வாரியம்

தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும், நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடி. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில்தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளனர். மாநிலத்தின் மின்சார பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வணிகம் பெருகி வருவதால் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினமும் மின்சார நுகர்வு சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளது. கோடைகாலத்தில் வீடு, அலுவலகங்களில் குளிர்சாதன பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் இந்த காலத்தில் மின் தேவை உச்ச அளவை எட்டுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுவது முதன்மையாக உள்ளன.

அடுத்தபடியாக, நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரித்து, வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் மின்வாரியம் விநியோகம் செய்து வருகிறது. இதுமட்டுமின்றி சூரியஒளி, காற்றாலை மின் உற்பத்தி, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்குதல் என நுகர்வோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மே 2ம் தேதி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மாநிலத்தின் மின் தேவை 23 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாக இருந்தால் எப்படி நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருக்கிறது என கூறப்படுகிறதோ, அதேபோல் மின்சார பயன்பாடும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அளவீடுகளில் ஒன்று.

மின்சார பயன்பாடு அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பல முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநிலம் மின் தடையற்ற நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களை காட்டிலும் மின் நுகர்வில் எப்போதும் முதன்மை வகிக்கும் மாநிலமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், சட்டமன்ற தேர்தல், கோடைகாலத்தை கருத்தில் கொண்டு மின் தேவை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே, 2026-27ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை 23,013 ஆக உயரும் என ஒன்றிய மின்சார ஆணையம் மதிப்பிட்டுள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில்தான் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளதால் அந்த நேரத்தில் தேர்தல் அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் பிரசார நிகழ்ச்சிகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் ஊடக பயன்பாடு ஆகியவற்றால் மின் நுகர்வு அதிகமாகும்.

அடுத்தாண்டு தேர்தல் நெருங்கும் போது தற்போது மாநிலத்தின் மின் தேவையான 6 சதவீதம் 7 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிக்க மின்வாரியம் தரப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அனல் மற்றும் அணுமின்நிலையங்கள் மூலம் கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் முதற்கட்டமாக, தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க அடுத்தாண்டு பிப்.1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை உச்ச நேரத்தில் மின்சாரத்தை விநியோகிப்பதற்காகவே மின்சாரத்தை வாங்குவதற்கான டெண்டர் கோருவதற்கான அனுமதியை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.

ஒட்டுமொத்தமாக 5.76 கோடி யூனிட் வரை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதனால் மின்வாரியத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வரை செலவாகும். இதுதவிர, ஏற்கனவே தென்மாநில மின் தொகுப்பு - தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் மின் தேவை எவ்வளவு அதிகரித்தாலும், அதனை பூர்த்தி செய்வதற்கான அனைத்து வழிகளும் மின்வாரியம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.