Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்த 6 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி மாநில தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு ‘சுமையாக’ மாறிவிட்டதா?

* தவறான பிரசார யுக்தி, பலவீனமான கட்டமைப்பு, கூட்டணி குளறுபடிகளால் தடுமாற்றம்

பாட்னா: மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்த பீகார் உள்ளிட்ட 6 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்விக்கு, தவறான பிரசார யுக்தி, கட்சியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் கூட்டணி குளறுபடிகள் ஆகியவையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் பீகார் ஆகிய ஆறு முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள், ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கும் முக்கிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா, அரியானா மற்றும் பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவில், பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகாயுதி’ கூட்டணி, கடுமையான போட்டிக்கு மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதேபோல, பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான ‘மெகா’ கூட்டணியை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைத்தது. அரியானாவில், தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியை பொறுத்தமட்டில் ஜார்கண்ட் மாநிலத்தில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி, பாஜகவின் சவாலை முறியடித்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜகவிடம் வீழ்ந்தது. அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, ‘பீகார் போன்ற மாநிலத் தேர்தல் முடிவுகள், தேசிய அளவிலான பிரச்னைகளை விட, உள்ளூர் பிரச்னைகள், மாநிலத் தலைவர்களின் ஆளுமை மற்றும் சாதகமான சாதி சூழல்களே சட்டமன்றத் தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை மட்டுமே வைத்து மாநிலங்களில் எளிதாக வென்றுவிட முடியாது என்பதை இந்த முடிவுகள் உணர்த்தியுள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆறு மாநிலத் தேர்தல் முடிவுகளும் எந்த ஒரு கூட்டணிக்கும் முழுமையான சாதகமாக அமையவில்லை. சில மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை நிரூபித்தாலும், மற்ற சில மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி புத்துயிர் பெற்றது. ஆனால் ஒன்றில் கூட காங்கிரஸ் தனது பலத்தை காட்டவில்லை. டெல்லியில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம்ஆத்மியுடன் ஒத்து போகவில்லை. அதனால் காங்கிரஸ் தனித்து ேபாட்டியிட்டு வீழ்ந்தது. பீகாரில் கூட இந்தியா கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்ததால், அந்த கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முடிவுகள் சமீபத்தில் நடந்து முடிந்த 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததை அம்பலப்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கட்சியின் இந்த படுதோல்வி, இந்தியா கூட்டணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டதுடன், மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு ‘சுமையாக’ மாறிவிட்டதோ என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி முற்றிலும் தோல்வியடைந்தது. பீகார் வாக்காளர்கள், தங்களின் அன்றாட உள்ளூர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தேசிய அளவிலான பிரச்னைகளையும், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளையும் மட்டுமே முன்னிறுத்திப் பேசினர். ராகுல் காந்தி தனது பிரசாரங்களில், ‘வாக்குகள் திருடப்படுகின்றன’, ‘ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது’ என்று தொடர்ந்து முழங்கியது மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நலத்திட்ட உதவிகளால் பயனடைந்த மக்கள், ‘நல்லாட்சி’ என்ற வாக்குறுதிக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

கட்சியின் பலவீனமான கட்டமைப்பு தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

அக்கட்சி நடத்திய ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ ஆரம்பத்தில் உற்சாகமாகத் தெரிந்தாலும், பேரணிகளில் கூடிய கூட்டத்தை வாக்குகளாக மாற்றுவதற்குத் தேவையான பூத் அளவிலான தொண்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் காங்கிரஸிடம் இல்லை. இது அக்கட்சியின் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டது. கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல்களும், சீட்டுப் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளும் தோல்வியை உறுதி செய்தன. மூத்த தலைவர்கள் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களுக்கு இடம் கிடைக்காததால், அதிருப்தி அடைந்த கோஷ்டிகள் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டன. சில இடங்களில், அவர்கள் பிரசாரத்தை முடக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த உட்கட்சிப் பூசல், கட்சியின் களப்பணியை வெகுவாகப் பாதித்தது. கூட்டணி நிர்வாகத்திலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இந்தியா கூட்டணியில் தெளிவான ஒருங்கிணைப்பு இல்லாததால், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளே ஒருவரையொருவர் எதிர்த்து ‘நட்பு ரீதியாக’ போட்டியிட்டன. இது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, குழப்பத்தை ஏற்படுத்தியது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஒரு வலுவான துணையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், வெறும் ஒற்றை இலக்க வெற்றிகளுடன் படுதோல்வி அடைந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாநிலத் தேர்தல்களில் அதன் பலவீனமான செயல்பாடு, கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி கூட, ‘கூட்டணிகளுக்கு காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி’ என்று ஏற்கெனவே பகிரங்கமாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு 2024 சரிவு... தற்காலிக விபத்து...

கடந்த ஜூன் 4, 2024 அன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியபோது, பாஜக தலைமை பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. ‘400-க்கும் அதிகமான இடங்கள்’ என்ற இமாலய இலக்குடன் தேர்தலைச் சந்தித்த அக்கட்சி, 2014ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக தனிப்பெரும்பான்மை பெறத் தவறியது. இந்த மாபெரும் சரிவு, ‘மோடி மேஜிக்’ அதன் உச்சத்தை கடந்துவிட்டதா?’ என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பியது. பிரதமர் மோடியின் 22 ஆண்டு கால தேர்தல் அரசியல் வரலாற்றில், முதல் முறையாக தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை அவர் சந்தித்தார். ஆனால், சில மாதங்களிலேயே இந்தக் கதையை பாஜக தலைகீழாக மாற்றியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி மற்றும் பீகார் ஆகிய முக்கிய மாநிலத் தேர்தல்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஆறில் நான்கு மாநிலங்களில் பெற்ற இந்த வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் சரிவு ஒரு தற்காலிக விபத்துதான் என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. 2024 சரிவுக்குக் காரணம், உட்கட்சி சறுக்கல்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடனான எதிர்பாராத விரிசல்தான் என கூறப்படுகிறது. பாஜக தன்னைத் தானே இயக்கிக் கொள்கிறது’ என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறிய கருத்து, சங் பரிவார் அமைப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட அதீத தன்னம்பிக்கை, மத்திய தலைமையின் பிரசாரத்தை மட்டுமே அதிகம் நம்பியிருந்தது மற்றும் உள்ளூர் மக்களின் குறைகளை மதிப்பிட்டது போன்றவையும் இந்த சரிவுக்கு வழிவகுத்தன. சரிவிலிருந்து மீண்டெழுந்த பாஜக, கட்சியின் உட்கட்டமைப்பு திறனும், களப்பணியாளர்களுமே அதன் மிகப்பெரிய பலமாக உள்ளது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் ‘இரட்டை இயந்திர அரசு’ என்ற கோஷங்கள், இந்த வெற்றிகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளன. பீகார் வெற்றியின் மூலம், பிரதமர் மோடி தனது வெற்றி உரையில், அடுத்த இலக்காக 2026 மேற்குவங்கத் தேர்தலை நிர்ணயித்துள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடருமா என்பதை வரும் மாதங்கள் தீர்மானிக்கும்.

‘இந்தியா’ கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி (இந்தியா) வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் வியூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், தேர்தல் பிரசாரத்தில் மிகவும் தாமதமாகக் களமிறங்கியது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், அவரது பிரசாரத்தில் புதிய உத்வேகமோ, மக்களை ஈர்க்கும் திட்டங்களோ இல்லை. அவர் அளித்த வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அவற்றை எப்படிச் செயல்படுத்துவார் என்பதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாததால், வாக்காளர்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.

தனது சொந்தத் தொகுதியான ராகோபூரிலேயே தேஜஸ்வி பின்தங்கியிருந்தது, அவரது பலவீனமான பிரசார யுக்தியையும், மக்களிடமிருந்து அவர் விலகி இருந்ததையும் தெளிவாகக் காட்டியது. கூட்டணிக்குள் நிலவிய குழப்பங்கள் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்டுக்கோப்பான ராணுவம் போலச் செயல்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுவதில் பெரும் இழுபறி நீடித்தது. இதன் விளைவாக, பல தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளே தங்களுக்குள் ‘நட்பு ரீதியாக’ மோதிக்கொண்டன. இது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்ததுடன், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஓட்டுகள் சிதறாமல் பார்த்துக்கொள்வதில் இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. முதல்வர் நிதிஷ் குமார் மீதான மக்கள் அதிருப்தியை மட்டுமே இந்தியா கூட்டணி தனது ஒரே மூலதனமாக நம்பியது.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நலத்திட்டங்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அவர்கள் கணிக்கத் தவறினர். இதனால், நிதிஷ் குமாரின் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை பெரிய அளவில் எழவில்லை. ஆளும் அரசை விமர்சிப்பதைத் தாண்டி, ஆக்கப்பூர்வமான மாற்றுத் திட்டத்தை முன்வைக்கத் தவறியது இந்தியா கூட்டணியின் தோல்வியை உறுதி செய்தது. அனைத்திற்கும் மேலாக, லாலு பிரசாத் யாதவின் ‘காட்டு ராஜ்ஜியம்’ கால ஆட்சி குறித்த அச்சத்தின் நிழல், இந்தியா கூட்டணியை இந்தத் தேர்தலிலும் விடாமல் துரத்தியது. தேஜஸ்வி யாதவ், தனது தந்தையின் சமூகநீதிக் கொள்கைகளை முன்னிறுத்திய போதிலும், அந்த ‘காட்டு ராஜ்ஜியம்’ என்ற கறையை அவரால் அகற்ற முடியவில்லை. இந்த அச்சத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகத் திறமையாகப் பயன்படுத்தி, தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது.

இறுதியாக, கூட்டணியில் இடம்பெற்றிருந்த விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (விஐபி) மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் படுமோசமான செயல்பாடு, இந்தியா கூட்டணியின் கப்பலை முழுமையாக மூழ்கடித்தது. விஐபி கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. பீகாரில் அடிமட்ட அளவில் வலுவான கட்டமைப்பு இல்லாத காங்கிரஸ் கட்சியால், வாக்காளர்களைத் திரட்டவோ, அரசுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கவோ முடியவில்லை. இந்த கூட்டணிக் கட்சிகளால் வாக்குகள் சிதறியதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த பணிக்கு முன்பு இந்தியா கூட்டணியால் சிறிதும் ஈடுகொடுக்க

முடியவில்லை.