சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை தவிர்த்து மற்ற 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜூலை 5ம் தேதியோடு முடிவடைந்தது.
இந்த ஊராட்சிகளில் மறுசீரமைப்பு, எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செயல்முறைகளுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் தேர்தல் நடத்த இயலவில்லை. அதனால், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2026 ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிக்கும் மசோதா கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, ஊராட்சிகள் 5ம் திருத்தச் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட முன்வடிவு உள்ளிட்ட 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
