பீகார்: பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒன்றிய பாஜக அரசு அம்மாநிலத்துக்கு புதிய திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்தை அடுத்து மிக பெரிய மாநிலம் பீகார். தேசிய அரசுகளில் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் பீகாருக்கு முக்கிய இடம் உண்டு.243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் பீகாரை நிதி மழையில் ஒன்றிய பாஜக அரசு நனைத்து வருகிறது. குறிப்பாக பெண்களை கவரும் திட்டங்களை அறிவித்து வருவது காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளை கலக்கம் அடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது. பீகாரில் 75 லட்சம் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக மகளிர் சுயஉதவி திட்டத்தை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தொழில் தொடங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தொடக்கத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் தொழிலில் சிறப்பாக செயல்பட்டால் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இது தவிர பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிசாலையாக மாற்றுவதற்கு 3872 கோடி நிதி ஒதுக்கப்பட்டள்ளது.
பக்கியாப்பூர், ராஜ்கீர் இடையிலான 104 கிலோ மீட்டர் ரயில்வே பாதையை 2 வழித்தடமாக மாற்றுவதற்கு ரூ.2192 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 10அன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது பீகாரில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற ரூ.7616 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவை தவிர பீகாரில் ரூ.11500 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் வழங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை பீகாரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா 2014 மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 11 ஆண்டுகளில் பீகாருக்கு 16 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐக்கிய ஜனதா, பாஜக கூட்டணியின் மாநில அரசும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கான திட்டங்களுக்கு நிதிஒதுக்கி உள்ளது. இந்த புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் தேர்தலில் தங்களது வெற்றியை உறுதி செய்யும் என்று பாஜக கூட்டணி நம்புகிறது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற பிரச்சாரம் செய்கின்றன. எந் பிரச்சாரம் ஈடுபட போகிறது என்று பீகார் வாக்காளர்களின் கைகளில் உள்ளது.