Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அசாம் பாடகர் மரண வழக்கு; சிங்கப்பூரில் உடனிருந்த இசையமைப்பாளர் கைது: சதிச்செயல் அம்பலமாகுமா?

கவுகாத்தி: பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க் மரண வழக்கில், சிங்கப்பூரில் அவருடன் இருந்த இசையமைப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல அசாம் பாடகரான ஜூபின் கர்க் (52), வடகிழக்கு இந்திய திருவிழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடந்த 19ம் தேதி, கடலுக்கு அடியில் டைவிங் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது திடீர் மரணம் அசாம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. இதைத் தொடர்ந்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூபின் கர்க்குடன் அந்த சொகுசுப் படகில் உடன் இருந்தவரும், அவரது இறுதி நேரங்களில் அருகில் இருந்தவருமான இசையமைப்பாளர் சேகர் ஜோதி கோஸ்வாமி என்பவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று கவுகாத்தியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

ஜூபின் கர்கின் கண்காணிப்பில் அலட்சியம் மற்றும் சதித்திட்டம் இருக்கலாம் என்ற கோணத்தில், பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் கோஸ்வாமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஜூபின் கர்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா, ஷியாம்கானு மஹந்தா மற்றும் சிங்கப்பூர் அசாம் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.