சிவகாசி: சிவகாசியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர், அவரது மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். இது தொடர்பான தகவலை மறைத்த செவிலியரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில் (33). இவரது மனைவி அஷ்மா காத்துன் (30). இவர்கள் இருவரும் சிவகாசி சாரதா நகரில் தங்கி, அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 9, 7, 5 மற்றும் 3 வயதில் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அஷ்மா காத்துன் 5வது முறையாக கர்ப்பமானார். நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அஷ்மா காத்துனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து அப்துல் ஜலில் தானே பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், கங்காகுளம் கிராம சுகாதார செவிலியர் கிரேஸ், வீட்டில் வைத்து பிரசவம் நடந்ததை மறைத்து, தாய் சேய் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பிரசவம் நடந்ததாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தாயும், சேயும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அப்துல் ஜலில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் நேரில் வந்து அவரிடம் விசாரித்தனர். இதில், ஏற்கனவே பிறந்த 4 குழந்தைகளுக்கும் அசாமில் இருந்தபோது வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்ததும், அந்த வகையில் 5வது குழந்தைக்கும் பிரசவம் பார்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை கண்டித்து எச்சரித்துள்ளனர். தொடர்ந்து நடந்த சம்பவத்தை மறைத்து தவறான தகவல் அறித்த கிராம சுகாதார செவிலியர் கிரேஸை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து சிவகாசி சுகாதார துணை இயக்குநர் ஜெகவீர பாண்டியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
