கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை மிகவும் இன்றியமையாதது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தரமான தீவனத்தை வழங்குகிறோமோ, கால்நடைகள் அந்த அளவுக்கு ஆரோக்கியமாக வளரும். தரமான தீவனத்தை வழங்குவதற்காக பல விவசாயிகள் பல்வேறு தீவனங்களை சொந்தமாகவே தயாரிக்கிறார்கள். பசுந்தீவனங்களை தங்கள் வயலிலேயே உற்பத்தி செய்துகொள்கிறார்கள். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தீவனங்களில் அசோலா ஒரு மிகச்சிறந்த தீவனமாக விளங்குகிறது. தண்ணீரில் மிதக்கக்கூடிய தாவரங்களில் ஒன்றான அசோலாவை நாம் மிக எளிதாக வளர்க்கலாம். தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு வரும் அசோலா கால்நடை தீவனத்துடன் கலந்து வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அசோலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. நெற்பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிகவும் இன்றியமையாதது. இத்தகைய தழைச்சத்தை ரசாயன உரங்களினால் பயிருக்கு வழங்கி வந்த நிலையில், இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் கிடைக்கச் செய்ய அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில், நீரில் மிதந்து வளரும் அசோலாவை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது. பெரணி (Floating Water Fern) என்ற தாவர இனத்தைச் சேர்ந்த அசோலா மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. இது நெல் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதந்து, காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது. பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்திலும் காணப்படும் அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 செ.மீ முதல் 2.5 செ.மீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செ.மீ முதல் 10 செ.மீ வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது.
தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது. இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக இருக்கும். கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படும். இலையில் மேற்புறத்தின் உட்பகுதியில்தான் தழைச்சத்தை கிரகிக்கும் அனாபினா அசோலே எனும் நீலப் பச்சைப்பாசி காணப்படுகிறது. இது தழைச்சத்தை கிரகித்து அசோலாவிற்கு அளிக்கிறது.அசோலா அதிக அலைகளில்லாத, அதிக நீரோட்ட வேகம் இல்லாத அமைதியான நீர் நிலைகளில் வளரக் கூடியவை. குளங்கள், சிறு ஓடைகள், நெல் வயல்களில் வளரக்கூடிய அசோலா மிதக்கும் வகை தாவரம்தான் என்ற போதிலும் வயலில் சேற்றுடன் கலந்த மண் பரப்பிலும் வளரும் தன்மையுடையது. அசோலா பிலிக்குலாய்டஸ் எனும் ரகம் 10-15 செ.மீ ஆழமாக வேர்விட்டு மண்ணில் சத்துக்களை உறிஞ்சிக் கொடுக்கும்.
வகைகள்
அசோலா பின்னேட்டா, அசோலா மெக்சிகானா, அசோலா பிலிக்குலாய்டஸ், அசோலா கரோலினியானா, அசோலா மைக்ரோபில்லா, அசோலா நைலோட்டிகா என பல வகைகளில் அசோலாக்கள் உள்ளன. தமிழகத்தில் மிகப் பரவலாக காணப்படுவது அசோலா பின்னேட்டா ரகம்தான். இந்த ரகம் அதிக தழைச்சத்தைக் கிரகித்து அதிக வெப்பநிலையைத் தாங்கி நன்கு வளரும் இயல்புடையது.
சத்துகள்
அசோலாவில் புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, சாம்பல், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துகள் அடங்கி உள்ளன. இவை பயிர்கள் செழித்து வளர மிகவும் உதவிபுரிகின்றன. அசோலா வளர்வது வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் என்றாலும் அதற்கான கீழ்கண்ட சூழ்நிலையை நாம் உண்டாக்க வேண்டும்.
வெளிச்சம் அவசியம்
பச்சையம் தயாரிப்பதற்கு சூரிய ஒளி தேவை என்றாலும் நேரடி சூரியக்கதிர் பாயாமல் நிழல் வலைக்குள் ஊடுருவிச் செல்லும் குறைவான வெளிச்சத்தில் நன்கு வளரும். பொதுவாக அசோலாவானது 25-50 சதவீதம் வெளிச்சத்தில் நன்கு வளரும். மிக அதிக சூரிய ஒளி அதனுடைய மென்மையான பகுதிக்கு சேதமுண்டாக்கும். மிக அதிக சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் அசோலா பழுப்பு, சிவப்பு நிறமாக மாறி இறந்துவிடும். அதேபோல மிகவும் இருட்டு இருந்து போதுமான சூரிய வெளிச்சமில்லையென்றாலும் வளர்ச்சி தடைபட்டு குறையும்.
தண்ணீர்
அசோலா வளர்ப்புக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீர் இல்லாமல் அசோலாவை வளர்க்க இயலாது. எப்போதும் தண்ணீரின் அளவை நிலையாக வைத்திருக்க வேண்டும். 4 அங்குல உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரின் மட்டம் குறைவாக இருந்தால் வேர்கள் குளத்தினை தொட்டால் அசோலாவில் வளர்ச்சி குன்றும்.
(அசோலா குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்)