விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் அசோலா பயன்படும் விதம் குறித்து கடந்த இதழில் கண்டோம். மேலும் அதை தொட்டிகளில் வளர்க்கும் முறை குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.அசோலா வளர்ப்புத் தொட்டியில் 1 கிலோ அளவிற்கு விதை அசோலாவைத் தூவ வேண்டும். விதை அசோலா என்பது மற்றொரு அசோலா வளர்ப்பாளரிடம் இருந்து வாங்கி வரும் புதிய அசோலாதான். இந்த அசோலா தொட்டியினுள் வெளி இலைகள் விழுந்துவிடாமலும், புழுதிக்காற்றினால் தூசு படியாமலிருக்கவும், நிழலின் அளவை சீராக்கவும், கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவை உள்ளே புகுந்து மிதித்து விடாமலிருக்கவும் உரிய வசதியை செய்ய வேண்டும். நிழல் வலையால் மேல் பகுதியிலும், நான்கு புறமும் மூடப்பட்ட அமைப்பை ஏற்படுத்தலாம்.நாம் தெளித்த விதை, சுற்றுப்புறச் சூழ்நிலை, சத்துக்களின் அளவு போன்றவற்றை அனுசரித்து அசோலாவின் வளர்ச்சி காணப்படும். இரண்டு அல்லது மூன்று வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா படர்ந்து இருக்கும். இதனை பிளாஸ்டிக் வலைகளைக் கொண்டு சேகரிக்கலாம். ஒரு 6 அடி × 4 அடி அசோலா தொட்டியிலிருந்து தினசரி 2 கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம். அசோலாவை பச்சையாகவே உணவாகக் கொடுக்கலாம். உற்பத்தி அதிகமாக இருக்கும்போது நிழலில் உலர்த்தியும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அசோலாவின் வளர்ச்சியில் குறைபாடு காணப்பட்டால் அதற்கு மணிச்சத்து பற்றாக்குறை, அதிக வெப்பம், அதிக வெளிச்சம் அல்லது பூச்சி தாக்குதல் காரணமாக இருக்கலாம். சுருண்ட வேர், குறைவான வளர்ச்சி, இலை சிறுத்துப் போதல், நிறமாற்றம் ஆகியவை மணிச்சத்து (பாஸ்பரஸ், குறைபாட்டால்) வருகின்றது. 25 சதுர அடி குளத்திற்கு 100 கிராம் பாஸ்பரஸ் உரமிட வேண்டும்.அதிக வெயிலினாலும், வெளிச்சத்தாலும் வளர்ச்சி குறைந்தால் நிழல் வலையின் சதவிகிதத்தை 50 லிருந்து 60% அல்லது 75% க்கு கூட்டலாம். வெளியே விரைவாக வளரும் அகத்தி போன்ற நிழல் மரங்களை வளர்க்கலாம். அசோலாவை கால்நடைகளுக்கு பச்சையாகவே கொடுக்கலாம். சாண வாடை அடித்தால் அசோலாவை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துவிட்டு கொடுக்கலாம். கால்நடை, கோழி போன்றவைகளுக்கான கலப்புத் தீவனம் கொடுக்கும்போது அத்துடன் அசோலாவை கலந்து கொடுத்தால் எளிதில் உண்ணும். கோழி, வான்கோழி, வாத்து போன்ற வீட்டுப் பறவைகள் அசோலாவை மிகவும் விருப்பமாக உண்ணும். வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு கோழிக்கும் 100-300 கிராம் அசோலா தீவனமாக கொடுக்கப்படுகின்றது. கோழி குஞ்சுகளில் தீவனத்தில் 20% அசோலா கலந்து கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையை அடைகின்றது. அசோலாவில் அதிகப் புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் உள்ளன. மேலும் இதில் நார்ப்பொருட்கள் குறைவு. கால்நடையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டுள்ளது. உப்புடன் அசோலா கலந்து பன்றிகளுக்குக் கொடுத்தால் பன்றியின் உடல் எடை விரைவில் அதிகரிக்கின்றது. அதன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும். பன்றிகள் அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்களும் மற்ற நீர் தாவரங்களை விட அசோலாவை விரும்பி உண்கின்றன.
அசோலாவானது மிக குறைந்த உற்பத்திச் செலவில் கிடைக்கக்கூடிய ஒரு உயிர் உரம். நீலப்பச்சை பாசியுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து விரைந்து வளர்ந்து, பெருகி அதிக மகசூல் கொடுக்கிறது. அசோலா தனது எடையை 2-3 நாட்களுக்குள் இரண்டு மடங்காக பெருக்கும் ஆற்றலை உடையது. 20-30 நாட்களுக்குள் வளர்ந்து ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் மகசூல் கொடுக்கும். இத்தனை அற்புத பலன்களையும், சக்தியையும் உடைய அசோலாவை கறவை மாடு வளர்ப்போர் சிறிது இடத்தை ஒதுக்கி வளர்க்கலாம். இதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. அசோலாவை கறவை மாடுகளுக்கு தொடர்ந்து தீவனமாக கொடுத்து வந்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். அத்துடன் பாலின் தரமும் கூடும். அசோலாவானது கால்நடைகளுக்கு சத்துக்கள் நிறைந்த தீவன இணை உணவு. குறைந்த உற்பத்தி செலவில் அசோலாவை உற்பத்தி செய்து கால்நடைகளுக்குக் கொடுக்கும்போது பாலின் உற்பத்தி செலவு குறைந்து லாபத்தின் அளவு கூடும்.
அசோலா வளர்கின்ற விதத்தையும், வேகத்தையும் கவனித்தால் அற்புதமான அனுபவமாக இருக்கும். அதனுடைய கணுக்கள் உடைந்து சிறுசிறு துண்டுகளாகி ஒவ்வொரு துண்டும் வேர்கள் விட ஆரம்பித்து தனித்து வளரும். இவ்வளவு விரைவான வளர்ச்சியை வேறு பயிர்களில் காண இயலாது. இந்தத் துரித வளர்ச்சியால்தான் 6 அடி X 4 அடி அளவுள்ள அசோலா வளர்க்கும் தொட்டியில் இருந்து தினசரி 2 கிலோ அளவிற்கு அசோலா அறுவடை செய்ய முடிகின்றது.ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேளாண் அறிவியல் நிலையம் அல்லது உழவர் பயிற்சி மையத்தை அணுகினால் விதைக்கான அசோலாவை எளிதில் பெறலாம். மிக எளிய தொழில்நுட்பம், குறைந்த முதலீடு, அபரிதமான மகசூல் உள்ள அசோலா வளர்ப்பு, கால்நடை வளர்ப்போருக்கு நல்லதொரு மாற்று தீவனத்தைக் கொடுக்கின்றது. குறைந்த செலவில் உற்பத்தியாகும் இந்த தீவனத்தைப் பயன்படுத்தும்போது நமது உற்பத்திச் செலவு குறைந்து லாபத்தின் அளவு அதிகரிக்கின்றது.