‘‘போக்சோ வழக்கு விவகாரம் நீறுபூத்த நெருப்பாகி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துல இருக்கவங்க கூண்டோடு தூக்கி அடிக்கப்படலாம்னு பேசிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல உள்ள அந்த காவல் நிலையத்துல இருந்து, போக்சோ வழக்கு ஒன்று ெதாடர்பான ரகசிய வாக்குமூலம் பற்றிய ஆவணம், வெளியிடப்பட்டு இருக்காம்.. பொதுவாக இதுபோன்ற வழக்குல பாதிக்கப்பட்டவங்க கொடுக்கும் ரகசிய வாக்குமூலம் நீதிமன்றத்திலும், போலீஸ் ஸ்டேஷனிலும் தான் இருக்கும்..
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யணும்.. குற்றம் சாட்டப்பட்ட நபர்கிட்ட விசாரிக்கணும் என்பதற்காக ஸ்டேஷனுக்கும் ரகசிய வாக்குமூலம் ஆவணம் செல்லும்.. இப்படி பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த அந்த ரகசிய வாக்குமூலம் ஆவணத்தை அந்த சிறுமியின் எதிர் தரப்பு கையில் எடுத்து இருக்காம்.. இந்த வாக்குமூல ஆவணத்தை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துல இருந்து தான் கைமாற்றி விட்டு இருக்காங்க என்று ரகசிய தகவலும் காக்கி உயர் அதிகாரிக்கு கிடைக்க, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவு போட்டு இருக்கிறாராம்..
சரக டிஎஸ்பியும் சென்று விசாரணை நடத்தி உள்ளாராம்.. அவரு கிட்ட அந்த காவல் நிலையத்துல இருந்தவங்க, மொட்டை கடிதம் மூலம் புகார் சொல்றாங்க.. நாங்க ரொம்ப நேர்மையானவங்க என கூறி உள்ளார்களாம்.. ஆனாலும் இன்னும் இந்த விவகாரம் முடியலையாம்.. நீறுபூத்த நெருப்பாக இருக்காம்.. விரைவில் அந்த காவல் நிலையத்துல உள்ளவங்க கூண்டோடு தூக்கி அடிக்கப்படலாம் என பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு மாவட்டத்திலேயே நான்கு சீட் கேட்டு மலராத கட்சி அடம் பிடிப்பது, இலைகட்சி தலைவர்களுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளை இலைக்கட்சியும், மலராத தேசிய கட்சியும் எப்படி பங்குபோடுவது என்பதில் இப்போதே பிரச்னை முட்டிக்கிட்டு இருக்காம்.. மாவட்டத்தில் குறைந்தபட்சம் வால்பாறை, பொள்ளாச்சி, சிங்காநல்லூர், கோவை வடக்கு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கவேண்டும் என மலராத கட்சி இப்போதே போர்க்கொடி தூக்கி விட்டதாம்..
கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மட்டுமே மலராத கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. இப்போது மேலும் 3 தொகுதிகளை கேட்பது இலைக்கட்சி தலைவர்களுக்கு கடும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தி இருக்காம்.. வால்பாறை தொகுதி இலைக்கட்சி எம்எல்ஏ உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், இத்தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற வேகம் இலைக்கட்சியில் இல்லை.. அதேநேரம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட இலைக்கட்சி சிட்டிங் எம்எல்ஏக்களே விருப்பமாக இருக்கிறார்களாம்.. தேர்தல் செலவு தொகை மொத்தத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்துள்ளார்களாம்.. அதேசமயம், இந்த 3 தொகுதிகளையும் பறித்துவிட வேண்டும் என மலராத கட்சி அழுத்தம் கொடுப்பதால் 3 சிட்டிங் எம்எல்ஏக்களும் புலம்பிக் கொண்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வாழை பயிர் செய்றதுக்கு பதிலாக பார்மர் ஒருத்தர் கஞ்சா பயிரிட்டதுதான் இப்ப ஹாட் டாப்பிக்கா போயிட்டிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல குடியேற்றம் பக்கத்துல குப்பம்னு ஒரு கிராமம் இருக்குது.. இங்க இருக்குற ஒரு பார்மர், தன்னோட நிலத்துல வாழை பயிர் செஞ்சி வந்தாராம்.. இந்த வாழைத்தோட்டத்துக்குள்ள யாருக்கும் தெரியாம பயிர் செய்யக்கூடாத கஞ்சாவை பயிர் செஞ்சி இருக்குறாரு.. இந்த கஞ்சா மேட்டரு, மாவட்ட தலைமை காக்கிகள் அலுவலகத்துக்கு போயிருக்கு.. உடனே மாவட்ட தலைமை காக்கிகள் உத்தரவுல, வாழைத்தோட்டத்துல சோதனையில ஈடுபட்டபோது, ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்த கஞ்சா பயிர்களை கண்டுபிடிச்சு அழிச்சிருக்காங்க.. வாழை விவசாயம் செஞ்சி பொழைக்க வேண்டியவரு, இப்ப ஜெயில்ல கம்பி எண்ணிக்கிட்டிருக்குறாராம்..
ஆந்திராவுல இருந்து கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட எல்லைகள்ல 24 மணிநேரமும் சோதனையை தீவிரப்படுத்தியதால, இங்கேயே கஞ்சா பயிரிட்டிருக்காங்க.. அதுவும் அறுவடைக்கு முன்பே கண்டுபிடிச்சு அழிக்கப்பட்ட நிலையில, மாவட்ட எல்லைகள்ல அதிரடி சோதனை நடத்த காக்கிகளுக்கு உத்தரவு பறந்திருக்குது.. இதுனால போலீசார் அதிரடி சோதனைகளை நடத்துறாங்க.. இந்த மேட்டர்தான் இப்போ வெயிலூர் மாவட்டத்துல ஹாட் டாப்பிக்கா போய்க்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி முடிவாகாததால் கோயம்பேடு கட்சியில் தொகுதி வேலையை பார்க்க முடியாம மாஜி எம்எல்ஏக்கள் திண்டாடி வருகிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஒவ்வொரு தேர்தலிலும் கோயம்பேடு கட்சியை ராஜ்யசபா சீட்டு ஆசையை காட்டி பகடைக் காயை போல் மாற்றுக் கட்சிகள் உருட்டியதால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் அக்கட்சி தெளிவான முடிவு எடுக்க இருக்கிறதாம்.. நிச்சயம் ஆட்சி அமைக்கும் கட்சியோடுதான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.. இதனால கட்சி நிகழ்ச்சி, பிரசாரங்களில் எந்த கட்சிகளையும் டேமேஜ் செய்யாமல் பெண் தலைவர் பேசி வருகிறாராம்..
யாருக்கும் ஆதரவும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்பதைபோல் அக்கட்சி நடுநிலையுடன் இருந்து வருவதால் யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெளிவாகாததால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், மீண்டும் களம்காண ஆசையில் உள்ள மாஜி எம்எல்ஏக்களும் தவித்து வருகிறார்களாம்.. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டங்களில் அதிக சீட்டு ஜெயிச்சதால அக்கட்சி மாஜிக்கள் மீண்டும் போட்டியிடும் ஆசையில் உள்ளார்களாம்.. புரம் என்று முடியும் மாவட்டத்தில் மாஜி எம்எல்ஏ ஒருவர் இரு தொகுதிகளுக்கு குறிவைத்து இருக்கிறாராம்..
ஆனால் யாருடன் கூட்டணி என்பது உறுதியானால்தான் குறிப்பிட்ட ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து எலக்ஷன் வேலையைகூட தொடங்க முடியும் என்பதால் திண்டாடி வருகிறாராம்.. அதேபோல் பக்கத்து மாவட்டத்துல எம்பி தேர்தலில் போட்டியிட்டவரும் தொகுதியை தேர்வு செய்ய முடியாமல் முணுமுணுத்து வருகிறாராம்.. இருப்பினும் அவரது மாவட்டத்துல அடுத்த மாதம் மாநாடு நடக்க உள்ளதால் கூட்டணி உறுதியாகி தனக்கான சீட்டும் கன்பாமாகிவிடும் என்ற நம்பிக்கையில் கொழுந்தனானவர் இருக்கிறாராம்.. இதுபற்றிதான் பரவலாக கோயம்பேடு வட்டாரத்தில் பேச்சு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


