மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஏஎஸ்எப் 4வது ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசின் முழு ஒத்துழைப்புடன் மாமல்லபுரத்தில் நடத்தும், 4வது ஏஎஸ்எப் ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி இன்று காலை 6.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டி, இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை காலை 6.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்தியா மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவு, தென் கொரியா உள்ளிட்ட 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 102 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 4 இடங்கள் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்படும். இதற்கிடையே, ஏஎஸ்எப் 4வது ஆசியன் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் டெம்பிள் பே ரிசார்ட்டில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில், தென் ஆப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அலைச்சறுக்கு விளையாட்டின் விளம்பர தூதருமான ஜான்டி ரோட்ஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் கவின்மொழி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.