அபுதாபி: நடப்பு ஆண்டிற்கான ஆசியக்கோப்பை தொடரை முதல் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் 8 ரன்களின் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் சத்ரானும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான செதுக்குல்லா அட்டல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். செதுக்குல்லா அட்டல் 41 பந்துகளில் அரை சதம் அடித்தார். முகமது நபி 33 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து களமிறங்கிய குல்புதீன் நைப் 5 ரன்களில் வெளியேற அஸ்மத்துல்லா உமர்சாய் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்து அதிரடி காட்டினார்.
ஹாங்காங் பந்துவீச்சை நொறுக்கிய அவர் 20 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். உமர்சாய் 21 பந்துகளில் அவர் 53 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். செதுக்குல்லா அட்டல் கடைசி வரை காலத்தில் நின்று 73 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி தொடக்கம் முதலே தடுமாறியது.
முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்ட பாபர் ஹாயத் 39 ரன்கள் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணி தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் அணி நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.