ஷிம்கென்ட்: கஜகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், டிராப் பிரிவில் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
டிராப் இளையோர் மகளிர் தனிநபர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த தனிஷ்கா, யுகன் தங்கப் பதக்கம், நிலா ராஜா பாலு வெள்ளிப் பதக்கம், அந்த்ரா ராஜசேகர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இவர்களில் வீராங்கனை நிலா, தமிழ்நாடு மாநில அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மகள். அதேபோல், வீராங்கனை அந்த்ரா ராஜசேகர், சினிமா தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
* சென்டர் பையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்
ஆடவர் அணி பிரிவில் நேற்று நடந்த 25 மீட்டர் சென்டர் பையர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர்கள் குர்பிரீத் சிங், ராஜ்கன்வர் சிங் சாந்து, அன்குர் கோயல் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட இவர்கள் ஒட்டு மொத்தமாக, 1733 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.