ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் அங்கிதா, ஜோதி சுரேகா அரை இறுதிக்கு தகுதி: 5 இந்திய வீராங்கனைகள் அசத்தல்
டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் அரை இறுதிக்கு, இந்தியாவின் ஜோதி சுரேகா, அங்கிதா உட்பட 5 வீராங்கனைகள் முன்னேறி உள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் தென் கொரியாவின் ஓ வூஹ்யுன் உடன் மோதிய இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா, 147-145 என்ற புள்ளிக் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து அரை இறுதிக்கு முன்னேறினார்.
அவர், சீனதைபே வீராங்கனை ஸி யு சென் உடன் அரை இறுதியில் மோதுவார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை பிரிதிகா பிரதீப், சக இந்திய வீராங்கனை சிகிதா தனிபார்தி உடன் மோதினார். அப்போட்டியில் 148-146 என்ற புள்ளிக் கணக்கில் பிரிதிகா வெற்றி வாகை சூடினார். இதையடுத்து, வங்கதேசத்தின் குல்ஸாம் அக்தர் மோனே உடன் அரை இறுதியில் பிரிதிகா மோதவுள்ளார்.
மகளிர் ரீகர்வ் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை அன்கிதா பகத், தென் கொரியாவின் ஜாங் மின்ஹீயை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் கொரியா வீராங்கனை லீ கஹ்யூனை 7-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வென்றார். இன்னொரு போட்டியில் இந்தியாவின் சங்கீதா, ஈரான் வீராங்கனை ஸரே ரெஹ்யானேவை 7-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். நேற்றைய போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 5 வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில் அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.
