ஆசிய கோப்பை டி.20 தொடர்; 14 மாதத்திற்கு பின் ஒயிட் பால் கிரிக்கெட்டில் களம் இறங்கும் பும்ரா: ஜெய்ஸ்வால், பன்ட்டிற்கு வாய்ப்பு இல்லை
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் ஆடும். லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா செப்.10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19 ம் தேதி ஓமனுடன் மோத உள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. அவர் 14 மாதங்களுக்கு பின்னர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் களம் இறங்க உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 29ல், அதாவது 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றொரு வேகப்பந்துவீச்சாளராக இடத்தை தக்க வைத்துக்கொள்வார். அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்குவார். இதனால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடையாது. சுப்மன் கில் 3வது இடத்தில் ஆடக்கூடும். திலக்வர்மா, கேப்டன் சூர்யகுமார், ஹர்திக்பாண்டியா, அக்சர்பட்டேல் ஆகியோரும் இடத்தை தக்க வைத்துக்கொள்வார்கள்.
கே.எல்.ராகுல், ரிங்குசிங், சாய் சுதர்சன் ஆகியோரும் இடபெற வாய்ப்பு இல்லை. மற்றொரு விக்கெட் கீப்பர் போட்டியில் ரிஷப் பன்ட், துருவ்ஜுரல், ஜிதேஷ் சர்மா உள்ளார். ஆனால் ஐபிஎல்லில் ரூ.27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட் பெரிதாக சாதிக்கவில்லை. இதனால் இந்த 3 பேரில் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை டி.20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனால் அணியில் பெரிய மாற்றம் செய்ய கம்பீர் விரும்பவில்லை. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி.20 உலக கோப்பைக்காக அணியை வடிவமைக்க உதவும்வகையில்ஆசிய கோப்பையில் பெரிய மாற்றம் இருக்காது என தெரிகிறது.