துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள், துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாக். அணியின் துவக்க வீரர் சயீம் அயூப், ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டானார். 2வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஹாரிசை (3 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்திய வீரர்களின் அற்புத பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாக். வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பகார் ஜமான் 17, கேப்டன் சல்மான் ஆகா 3, ஹசன் நவாஸ் 5, முகம்மது நவாஸ் 0, ஷாகிப்ஸதா பர்கான் 40, பாஹீம் அஷ்ரப் 11 ரன் எடுத்து அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் தலா 2, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.