ஹாங்சோ: மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-சிங்கப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துவக்கம் முதல் அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகளை சமாளிக்க முடியாமல் சிங்கப்பூர் தடுமாறியது. தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீராங்கனைகள் 12 கோல்களை போட்டு அசத்தினர். அதில் 5, பெனால்டி கார்னர் வாய்ப்பில் கிடைத்தவை.
மாறாக, சிங்கப்பூர் ஒரு கோல் கூட போடவில்லை. அதனால், 12-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்ததோடு, சூப்பர் 4 சுற்றிலும் நுழைந்தது. சூப்பர் 4 சுற்றில் விளையாட, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகள் இடையே நடக்கும் போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்று போட்டிகள் நாளை தொடங்குகின்றன.