மும்பை: ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியில் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்சித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தவிர, தேவைப்பட்டால் பயன்படுத்தும் வகையில் கூடுதல் வீரர்களாக, பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேர் உள்ளனர்.
* செப். 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல்: செப்.28ல் துபாயில் பைனல்
ஆசிய கோப்பை டி20 தொடர், வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளை இந்தியா நடத்துகிறது. இருப்பினும், போட்டிகளில் பாகிஸ்தானும் பங்கேற்பதால், பொதுவான இடங்களாக, துபாயில் 11 போட்டிகளும், அபுதாபியில் 5 போட்டிகளும் நடைபெற உள்ளன. ஆசியாவை சேர்ந்த 8 நாடுகள் ஆசிய கோப்பை போட்டி தொடரில் ஆடவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் நிரந்தர உறுப்பு நாடுகளான, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 நாடுகளுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஹாங்காங் ஆகிய நாடுகளும் இத்தொடரில் ஆடுகின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரு குரூப்களிலும் உள்ள அணிகள், தங்களுக்குள் தலா ஒரு முறை போட்டியில் சந்திக்கும்.
லீக் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். முதல் போட்டி, அபுதாபியில், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடையே, செப். 9ம் தேதி நடக்கிறது. இந்தியா, செப். 10ம் தேதி, தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிறது. பின், 14ம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனுடனும் இந்தியா மோதுகிறது. இறுதிப் போட்டி, செப். 28ம் தேதி, துபாயில் நடைபெறும்.