துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் நேற்று, இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகின்றன. சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளில் கிடைத்த வெற்றி, தோல்வி அடிப்படையில், இறுதிப் போட்டிக்கு, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான சம்பிரதாய போட்டி துபாயில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் 4 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன் விளாசி ஓய்ந்தார். பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட்டானார்.
பின் இணை சேர்ந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அற்புதமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் 4வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த நிலையில், சஞ்சு (39 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. திலக் வர்மா 49, அக்சர் படேல் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் மஹீஸ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா, சமீரா, தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே மட்டுமே எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 5 பந்துகளில் 2 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.