Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4ல் கடைசி போட்டி; இலங்கையுடன் இந்தியா இன்று சம்பிரதாய மோதல்: இறுதி போட்டிக்கு பயிற்சி ஆட்டம்

துபாய்: 17வது ஆசிய கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய இந்தியா நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் அசுர பலத்துடன் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு நடக்கும் இலங்கைக்கு எதிரான போட்டி சம்பிரதாய போட்டியாகவும், பைனலுக்கு தயாராக இந்தியாவுக்கு பயிற்சி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ஓபனர் அபிஷேக் சர்மா 5 போட்டியில் 248 ரன் விளாசி ஆக்ரோஷமான பார்மில் உள்ளார். ஓபனிங் சிறப்பாக இருந்தாலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருப்பது கவலையளிக்கிறது. கேப்டன் சூர்யகுமார் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். பவுலிங்கில் குல்தீப் யாதவ் 12 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். இன்றைய போட்டியில் பும்ரா மற்றும் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இன்றைய போட்டியில் வெற்றியுடன் பைனலுக்குள் நுழையும் முனைப்பில் இந்தியா களம் காண்கிறது.

மறுபுறம் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியடைந்ததால் பைனல் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் எண்ணத்தில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் நிசங்கா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் நல்ல பார்மில் உள்ளனர். பவுலிங்கில் ஹசரங்கா, தீக்‌ஷனா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். துபாய் பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன் அடித்தாலே எதிரணிக்கு அது சவாலான இலக்காக இருக்கும்.

இதுவரை நேருக்கு நேர்....

* டி20 வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 22 போட்டிகளில் இந்தியாவும், 9 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி பல்லேகலேவில் நடந்த போட்டி டையில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் இந்தியா வென்றது.

* துபாய் மைதானத்தில் இந்தியா இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி, அதில் 9ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்துள்ளது.

* துபாயில் இரு அணிகளும் இதற்கு முன் 2022ல் ஆசிய கோப்பை டி20ல் சூப்பர் 4 சுற்றில் மோதின. இதில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.