ஆசிய கோப்பை டி 20 தொடர்; துவக்க வீரராக சஞ்சுக்கு பதில் வைபவ் சூர்யவன்ஷி: மாஜி தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கருத்து
சென்னை: ஆசிய கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக யார் களம் இறங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சனுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதிரடி வீரர் ஜெய்ஸ்வாலையும் இந்தியா டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஏற்கனவே நன்றாக விளையாடி வருவதால் இந்த காம்பினேஷனை மாற்ற கம்பீர் விரும்பவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:- சஞ்சு சாம்சனுக்கு ஷார்ட் பால்களை எதிர்கொள்வதில் பிரச்சனை இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட அவர் தடுமாறினார். என்னை பொறுத்தவரையில் அவர் தொடக்க வீரராக களம் இறங்கினால், நிச்சயம் எதிரணி இந்த ஆயுதத்தை அவருக்கு எதிராக பயன்படுத்தக் கூடும். இதுவே நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தால் அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து எனது நம்பர் ஒன் வீரராக பயன்படுத்துவேன். மற்றொரு தொடக்க வீரராக தமிழக வீரர் சாய் சுதர்சன் அல்லது 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்வேன்.
வைபவ் சூரியவன்சியை என்னுடைய டி20 உலக கோப்பை அணியில் நிச்சயம் நான் தேர்வு செய்வேன். அவர் அபாரமாக விளையாடி வருகிறார். சாய் சுதர்சனை பொறுத்தவரையில் அவர் ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்து இருக்கிறார். ஜெய்ஸ்வாலும் நன்றாக விளையாடி வருகிறார். எனவே சாய் சுதர்சன், சூர்யவன்ஷி அல்லது ஜெய்ஸ்வால் இந்த மூன்று பேரில் ஒருவர் தான் அபிஷேக் ஷர்மாவுடன் விளையாட வேண்டும். அதுதான் என் விருப்பமாக இருக்கும். இதேபோல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் சர்மா என இரண்டு பேரில் ஒருவரை சேர்க்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் போன்றோரையும் இந்திய அணியில் சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.