மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்.9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28ம்தேதி பைனலில் மோதும்.
லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தில் டி.20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொள்கின்றனர்.
டெஸ்ட் கேப்டன் சுப்மன் கிலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்ப்பு உள்ளது. அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வாலும் உள்ளார். ஐபிஎல்லில் கலக்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு 2 ஆண்டுக்கு பின் அணியில் இடம் கிடைக்கலாம். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அவருக்கு மாற்றாக ஜிதேஷ் சர்மா இடம்பெறுவர். ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது. பும்ரா ஆட விரும்புவதால் முகமதுசிராஜ் இடம்பெற வாய்ப்பு இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும். தரமான வீரர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது தேர்வு குழுவினருக்கு பெரும் தலைவலியாக இருக்கப்போவது உறுதி.
இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்;
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான முகமது ரிஸ்வான், பாபர் அசாமுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணி விபரம்: சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (வி.கீ), முகமது நவாஸ், முகமது வாசிம், சாஹிப்சாதா பர்ஹான், சல்மான் அயூப், சயீம் அயூப், ஷாஹீன் அயூப், முகீம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணி தேர்வுக்கு பின் தலைமைத் தேர்வாளர் ஆகிப் ஜாவேத் கூறுகையில், இந்த அணிக்கு ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உலக கிரிக்கெட்டில் மிகப்பெரியது. ஒவ்வொரு வீரருக்கும் இது தெரியும்” என்றார்.