மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்.9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28ம்தேதி பைனலில் மோதும்.
லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பாகிஸ்தான், 19ம் தேதி ஓமனுடன் மோத உள்ளன. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுகுழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அஜித் அகர்கர் பத்திரிகையாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடர் முடிந்த 4 நாட்களில் சொந்த மண்ணில் வெஸ்ட இண்டீசுக்கு எதிரான 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் (அக்.2-14)நடைபெற உள்ளது. இதனால் டெஸ்ட்டில்ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், பும்ரா சேர்க்கப்பட்டாலும் அவர்கள் பைனலில் ஆடமாட்டார்கள் என தெரிகிறது. வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் இரு அணிகளிலும் இடம்பெறுவார்கள். எனவே பணிச்சுமையை மனதில் கொண்டு தேர்வர்கள் புத்திசாலித்தனமாக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வேறு ஏதாவது தொடராக இருந்திருந்தால் கில்லுக்கு தேர்வு குழுவினர் ஓய்வு அளித்திருப்பார்கள். ஆனால் இது ஆசிய கோப்பை தொடர் மற்றும் அடுத்த ஆண்டு டி.20உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் முக்கிய தொடர்.
இதனால் கில் விஷயத்தில் தேர்வுகுழுவினர் முக்கிய முடிவு எடுக்கவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நீடிப்பார். அபிஷேக் சர்மா, சஞ்சுசாம்சன், திலக்வர்மா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக்பாண்டியா ஆகியோர் அணியில் இடம் பெறுவது உறுதி. மீதமுள்ள 5பேர் யார் என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த 3 மாதத்தில்.....
* துலீப் டிராபி: ஆக. 28 முதல் செப். 14.
* ஆசிய கோப்பை: செப் 9 முதல் 28.
* இந்தியா-வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடர்: அக். 2-14
* இந்தியா, ஆஸி. சுற்றுப்பயணம்: அக். 19-நவ. 8