Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை சூப்பர் சுற்றில் இந்தியா அபார வெற்றி; பாக். வீரர்கள் தேவையின்றி திட்டியதால் பேட்டால் வெளுத்து வாங்கினேன்: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

துபாய்: ஆசியக் கோப்பை 20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஃபர்ஹான் 58 ரன், கடைசி நேரத்தில் களமிறங்கிய அஷ்ரப் 8 பந்துகளில் 20 ரன்களும் குவித்தனர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ஷாகின் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸ் அடித்து அசத்தினார். தொடர்ந்து இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினர். அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் 52 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. இதன்பின் சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். பின்னர் சஞ்சு சாம்சன் - திலக் வர்மா கூட்டணி நிதானமாக ஆடினர்.

அப்போது ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் 13 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன்பின் ஹர்திக் பாண்டியா வந்தார். இறுதியாக திலக் வர்மா சிக்ஸ், பவுண்டரி விளாச இந்திய அணி 6 விக்கெட்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 6 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதுபெற்ற அவர் கூறியதாவது:- இன்று நான் அதிரடியாக ஆடியதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாமல் எங்களை பார்த்து கோபமாக திட்டினர். சண்டை போட்டனர். அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதற்கான பதிலை என் பேட் மூலம் நான் கொடுத்தேன். பாகிஸ்தான் வீரர்களுக்கு இதுபோல் ஒரு மருந்தை மட்டுமே என்னால் கொடுக்க முடியும்.

நானும் கில்லும் குழந்தை பருவத்தில் இருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம். நான் அவருடன் இதுபோல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தேன். அது இன்று (நேற்று) நிறைவேறி அணிக்கு மிகவும் முக்கியமாக மாறி இருக்கின்றது. இன்று என் நாள் என்பதால் என் அணிக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என நினைத்தேன். அது நடந்துவிட்டது. அணியின் ஆதரவு இருப்பதால்தான் என்னால் அதிரடியாக ஆட முடிகிறது’’ என்றார்.

சுப்மன் கில், அபிஷேக் சர்மா நெருப்பு, ஐஸ் போன்றவர்கள்;

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ``பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் இனி எங்களுக்கு சவால் நிறைந்த போட்டியே கிடையாது. ஏனென்றால் நாங்கள் அவர்களைவிட சிறப்பான கிரிக்கெட்டை ஆடி வருகின்றோம். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 91 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இடைவேளை வந்தது. அதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை என்று நினைக்கிறேன். நாங்கள் பத்து ஓவருக்கு பிறகு பந்துவீச்சில் நன்றாக கவனம் செலுத்தினோம். இந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்து வீசவேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். எங்களது சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பும்ரா ஒன்றும் ரோபோ கிடையாது. அவரும் சாதாரண மனிதர் தான். அவர் நிச்சயம் மீண்டும் கம்பேக் கொடுப்பார். சிவம் துபேவின் பந்துவீச்சுதான் போட்டியிலே திருப்புமுனையை ஏற்படுத்தியது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர் அணிக்காக வெற்றியை தேடி தருவார். எங்கள் அணி வீரர்கள் முக்கியமான கட்டத்தில் பொறுப்புடன் விளையாடுவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. கில்லும், அபிஷேக் சர்மாவும் நெருப்பு, ஐஸ் போன்றவர்கள். ஒருவரை புரிந்து கொண்டு அபாரமாக விளையாடுகிறார்கள். இந்த இலக்கை துரத்தும்போது ஏதேனும் ஒரு வீரர் 10 முதல் 12 ஓவர் வரை நிற்க வேண்டும் என நினைத்தோம். அதை அவர்கள் செய்து காட்டிவிட்டார்கள்’’ என்றார்.

பவர்பிளேவில் பிரித்து மேய்ந்துவிட்டார்கள்;

பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில், ``நாங்கள் இன்னும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் குறிப்பாக பவர் பிளேவில் அதிரடியாக ஆடி எங்களிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டார்கள். நாங்கள் இன்னும் கூடுதலாக 15 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனினும் 171 ரன்கள் எடுத்தது ஒரு நல்ல இலக்கு தான். எங்கள் அணியில் ஹரிஷ் ராவுப் மற்றும் பகீம் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். எங்கள் அணி வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்டார்கள். எனினும் பவர் பிளேவை எங்களை விட இந்தியா சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். எங்கள் அணியின் பவுலர்கள் அதிக அளவு ரன்களை விட்டுகொடுப்பதை மாற்ற வேண்டும் என நினைக்கிறோம். இந்த போட்டியிலும் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’’ என்றார்.