ராஜ்கிர்: ஆடவருக்கான ஆசிய ஹாக்கி போட்டியில், சீனாவை, 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் 12வது தொடர் நேற்று பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் தொடங்கியது. அங்கு நேற்று மாலை நடந்த லீக் போட்டியில், முன்னாள் சாம்பியனும், போட்டியை நடத்தும் நாடுமான இந்தியாவை, சீனா நேருக்கு நேர் சந்தித்தது.
போட்டி துவங்கி 12வது நிமிடத்தில், சீனாவின் ஷிஹாவ் முதல் கோலடித்தார். அதன் பின் இந்தியா அடுத்தடுத்து 2 கோலடித்ததால், 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அடுத்து 2வது பாதியில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் அடித்தன. பின், 37வது நிமிடத்தில் சீனா மேலும் ஒரு கோலடிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.
கடைசி கட்டத்தில், தனது போராட்டத்தை தீவிரப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் தனது ஹாட்ரிக் கோலை அடித்தார். அதனால் இந்தியா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக நேற்று காலை நடந்த முதல் போட்டியில், வங்கதேசத்தை, 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியா வென்றது. மற்றொரு போட்டியில், சீன தைபே அணியை, 7-0 என்ற கோல் கணக்கில் கொரியா வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து நடந்த 3வது ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை, 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது.