Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் சர்ச்சை ராகுல் காந்தியை பாராட்டிய பாக். மாஜி கேப்டன் அப்ரிடி: பா.ஜ விமர்சனம்

புதுடெல்லி: காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், அதை தொடர்ந்து இந்தியா, பாக். போருக்கு பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த 14ஆம் தேதி மோதின. இதற்கு சிவசேனா உத்தவ் பிரிவு, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தேவையா? அது இந்திய வீரர்களின் உயிர்தியாகத்தை அவமதிப்பது ஆகாதா? இதுவா தேசபக்தி? என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் ஞாயிறு நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

அப்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பான கேள்விக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ‘‘வாழ்க்கையில் சில விஷயங்கள், ஒரு விளையாட்டு வீரரின் மனப்பான்மையை விட முன்னால் இருப்பதாக நான் உணர்கிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். இந்த வெற்றியை எங்கள் ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம்’ என்றார். இதுசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது தொடர்பாக பாகிஸ்தானில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,’இது ஒரு இழிவான மனநிலை. அவர்களின் தலைவராக பிரதமர் மோடி இருக்கும் வரை இது தொடரும். உரையாடல் மூலம் உலகத்துடன் ஒத்துழைக்க விரும்பும் ராகுல் காந்தி போன்ற நேர்மறையான மனநிலையுடன் கூடிய நல்லவர்களும் இந்தியாவில் உள்ளனர்.

ஆனால் நீங்கள் இங்கே இஸ்ரேலைப் போல மாற முயற்சிக்கிறீர்கள்’ என்றார். அவரது பேச்சை ராகுல்காந்திக்கு எதிராக பா.ஜ பயன்படுத்தி உள்ளது. பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி,’ ராகுல் காந்தி ஒரு புதிய ரசிகரை கண்டுபிடித்துள்ளார். அவர் அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இந்தியாவின் எதிரிகள் பாராட்டுகளைப் பொழிவதிலிருந்து ​​காங்கிரஸ் பாரதத்திற்கு எதிரான, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு கட்சி என்பது உங்களுக்குத் தெரியும்’ என்றார்.

மற்றொரு பாஜ தலைவரான ஷெஹ்சாத் பூனவலா,’ஆச்சரியப்படுவதற்கில்லை! இந்தியாவை வெறுக்கும் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸில் ஒரு கூட்டாளியைக் காண்கிறார்கள். சோரோஸ் முதல் ஷாஹித் வரை. இந்திய தேசிய காங்கிரஸ்(INC) = இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ். 26/11 மும்பை தாக்குதல், புல்வாமா, 370 வது பிரிவு நீக்கம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பஹல்காமில் நடந்த சம்பவங்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் பாகிஸ்தானின் கதையை எதிரொலிக்கிறது’ என்றார்.

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு,’ ராகுல் காந்தி பாகிஸ்தானின் செல்லம். ஷாஹித் அப்ரிடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுல் காந்தியை தங்கள் தலைவராகக் கூட ஆக்க முடியும்’ என்றார். பா.ஜ ஐ-டி துறைத் தலைவர் அமித் மாளவியா,’பாரதத்தின் எதிரிகள் உங்களைப் பாராட்டத் தொடங்கும் போது, ​​உங்கள் விசுவாசம் எங்கே இருக்கிறது என்பதை இந்திய மக்களுக்குத் தெரியும்்’ என்றார்.

* காங்கிரஸ் பதிலடி

அப்ரிடி பேச்சுக்காக ராகுல்காந்தியை விமர்சனம் செய்த பா.ஜவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரசின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பதிவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது ஷாஹித் அப்ரிடியுடன் அனுராக் தாக்கூர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில்,’ நீங்கள் அப்ரிடியுடன் இனிமையாகப் பேசுகிறீர்கள், நட்பைப் பேணுகிறீர்கள். பின்னர் எங்களை கேள்வி கேட்கிறீர்களா?’ என்று பதிலடி கொடுத்தார்.