ஹாங்சூ: ஆசியா கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று, தாய்லாந்து அணியை, இந்திய மகளிர் அணி, 11-0 என்ற கோல் கணக்கில் பந்தாடி வெற்றி வாகை சூடியது. சீனாவின் ஹாங்சூ நகரில், ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில், இந்தியா, சீனா, தாய்லாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை, ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகளின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்று போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், வரும் 14ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்நிலையில், பி பிரிவில் உள்ள இந்தியா, தாய்லாந்து அணிகள் இடையிலான போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் துவக்கம் முதல் அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர். போட்டி துவங்கி 7வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் கோலடித்து கணக்கை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, சங்கீதா குமாரி 10, நவ்நீத் கவுர் 16, லால்ரெம்சியாமி 18, தோடம், உதிதா துஹன் 30வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து தாய்லாந்து அணியை திணறடித்தனர். போட்டியின் முடிவில் இந்திய அணி 11 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது.
தாய்லாந்து அணி வீராங்கனைகளால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியாமல் வெறுங்கையுடன் திரும்பினர். இந்திய தரப்பில் உதிதா துஹான், பியுட்டி தங்தங் தலா இரு கோல்கள் அடித்து மெகா வெற்றி பெற உதவினர். அடுத்ததாக, இன்று நடக்கும் போட்டியில் ஜப்பான் அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. ஆசியா கோப்பை ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணி, 2026ல், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.