செங்டு: சீனாவில் நடந்து வரும் பேட்மின்டன் ஆசியா யு17 மற்றும் யு15 ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகள் ஷாய்னா மணிமுத்து, தீக்சா சுதாகர் அபார வெற்றிகளை பெற்று தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றனர். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான யு15 மகளிர் பிரிவு ஜூனியர் பேட்மின்டன் போட்டியில் நேற்று ஜப்பானின் சிஹாரு தோமிடாவுடன் இந்திய வீராங்கனை ஷாய்னா மணிமுத்து மோதினார்.
துவக்கம் முதல் அற்புதமாக ஆடிய ஷாய்னா 21-14, 22-20 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான யு17 மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீக்சா சுதாகர், லக்சயா ராஜேஷ் மோதினர்.
இந்த போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய தீக்சா, 21-16, 21-9 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். யு17 மகளிர் பிரிவு பேட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தீக்சா அரங்கேற்றி உள்ளார். தற்போதைய ஆசியா யு17 மற்றும் யு15 சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக, 2 தங்கம், ஒரு வௌ்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
