ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் நேற்று, நடப்பு சாம்பியன் கொரியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிகள், பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வந்தன. ஆசியாவை சேர்ந்த 8 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியின் லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, கொரியா, மலேசியா, சீனா ஆகிய 4 நாடுகளின் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அவற்றுக்குள் நடந்த போட்டிகளின் இறுதியில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், கொரியாவும் நேற்று இறுதிச்சுற்றில் மோதின. போட்டி துவங்கிய முதல் நிமிடத்திலேயே, இந்திய வீரர் சுக்ஜீத் முதல் கோலடித்து அசத்தினார்.
2வது பாதியில் தில்பிரீத் சிங் இந்தியாவுக்காக 2வது கோலடித்து கரகோஷம் பெற்றார். தொடர்ந்து 45வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் அணியின் 3வது கோல் போட்டு அணியை வலுவாக்கினார். பின், 50வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ், பெனால்டி கார்னரை, 4வது கோலாக்கினார். 51வது நிமிடத்தில் கொரியா வீரர் ஸோன் டெய்ன், அணியின் முதல் கோலை போட்டார். அதன் பின் கோல் விழாததால், 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முன்னதாக நடந்த போட்டியில் சீனாவை, 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா வெண்கலப் பதக்கம் வென்றது.