Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒரு லட்சம் டன் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய நெல் கிடங்கு நாகையில் உள்ளது: விஜய்க்கு ஏஐடியூசி பதிலடி: சுமை தூக்கும் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தியதற்கு கண்டனம்

தஞ்சாவூர்: ‘ஒரு லட்சம் டன் நெல் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய கிடங்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது’ என விஜய்க்கு, ஏஐடியுசி சங்கம் பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய், சுமை தூக்கும் தொழிலாளர்ளை கொச்சைப்படுத்தி பேசியது வருந்தத்தக்கது.

கள நிலவரம் அறியாத பேச்சாக அமைந்துவிட்டது. கடந்த 20, 21ம் தேதிகளில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூட்டைக்கு 40 ரூபாய் விவசாயிகளிடம் பெறுவதாகவும், அதற்கு முதலமைச்சர் காரணம் என்றும் விஜய் பேசியுள்ளார். நெல் கொள்முதலில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை.

விவசாயிகளுக்கு இடையூறின்றி அனைத்து நெல்லையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருமே விவசாயிகள் தான். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் தமிழ்நாட்டில் செய்கின்ற கொள்முதல் பணி என்பது மிகப்பெரிய சவாலான பணி. இந்தியாவிற்கே முன் உதாரணமான பணியாகும்.

எவ்வித அதிகாரம் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் அடிமட்டத்தில் இருக்கின்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஊழலுக்கு காரணம் என்றும், உண்மையான கள நிலமையை அறியாமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசும், நிர்வாகமும் விவசாயிகளின் புகாருக்கு உடனடியாக மதிப்பளிக்கிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிடங்கு ஒரு லட்சம் டன் நெல் இருப்பு வைக்ககூடிய கிடங்கு நாகப்பட்டினம் மாவட்டம் கோவில்பத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதனை அறியாமல் விஜய் பேச்சில் நாகப்பட்டினத்தில் நெல் சேமிப்பதற்கு கிடங்கு கட்டி இருக்கிறார்களா கட்டவில்லையே என்று பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார். ஒன்றிய அரசின், புதிய உணவு கொள்கை மாநில அரசின் உரிமைகளை முற்றிலுமாக பறித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. 17 சதவீதத்திற்கு கீழ்தான் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் கொள்முதல் காலம், மழை மற்றும் பனி காலம் என்பதால் 22 சதவீதம் ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. டெல்டா விவசாயிகளின் இது போன்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்து பிரசாரத்தில் விஜய் தெரிவிக்கவில்லை.

ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, தொழிலாளர் விரோதமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் தான் இன்று மிகப்பெரிய ஆபத்தாக, சவாலாக இருக்கிறது. சிறிதும் அதை பற்றி விமர்சிக்காமல், அவரது பிரசாரம் மக்கள் நலனை முன்னிறுத்துவதாக இல்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.