ராஜ்கிர்: பீகாரில் நடைபெறும் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிந்தன. அதில் ஏ பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்ற இந்தியா முதல் இடத்தையும், 2 வெற்றிப் பெற்ற சீனா 2வது இடத்தையும் பிடித்தன. அதேபோல் பி பிரிவில் நடப்பு சாம்பியன் கொரியா, 2 வெற்றிகளுடன் 2வது இடத்தை பிடிக்க, 3 ஆட்டங்களிலும் வென்ற மலேசியா முதல் இடம் பிடித்தது. 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் நேற்று ஓய்வு நாள்.
இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தொடர்ந்து இன்று இரவு நடைபெற உள்ள 2வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நடப்பு சாம்பியன் கொரியாவும் மோத இருக்கின்றன. சூப்பர் 4 சுற்றில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செப். 7ம் தேதி நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்திக்கும். முன்னதாக 5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான, முதல் ஆட்டத்தில் ஜப்பான்-சீன தைபே அணிகள் களம் காண இருக்கின்றன.