Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிஎஸ்கே.வுக்கு அஸ்வின் `குட்பை’... மீண்டும் ராஜஸ்தானில் ஐக்கியம்? ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ரூ.9 கோடியே 75 லட்சம் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் திரும்பினார். இந்த சூழலில் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை சிஎஸ்கே அணிக்காக ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம்தான் மிஞ்சியது. பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. பேட்டிங்கில் 9 போட்டிகளில் ஆடி 33 ரன்கள் தான் அடித்து இருந்தார். பந்துவீச்சில் 7 விக்கெட்டுகள்தான் எடுத்தார். இந்நிலையில் தான் எதிர்பார்த்தபடி சிஎஸ்கே அணிக்காக சரியாக செயல்படவில்லை என்பதை அஸ்வின் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த தருணத்தில் அஸ்வின் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தன்னை அணியிலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது. ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட அஸ்வின், ``நான் நீங்கள் எதிர்பார்க்காத அளவு சிஎஸ்கே அணிக்காக அதிக ஆண்டு விளையாடுவேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால் ஒரு சீசன் முடிவடைந்த நிலையில் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறப் போகிறேன் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக வரவுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை மீண்டும் கேட்பதாக தெரிகிறது. இதையறிந்து கொண்ட அஸ்வின், தான் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு செல்ல இருப்பதாகவும் இதனால் தம்மை விடுவித்து விடுங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு பதில் அஸ்வின் சென்றால் அது சிஎஸ்கே அணியின் பலத்தை மேலும் அதிகரிக்க தான் செய்யுமே தவிர பலவீனப்படுத்தாது என்று கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

அடுத்து என்ன?

அஸ்வின், சிஎஸ்கே அணியில் இருந்து டிரேடிங் முறையில் வேறு அணிக்கு மாற்றப்படுவாரா அல்லது வரவிருக்கும் மினி ஏலத்தில் இடம்பெறுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும். இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், அவரை சிஎஸ்கே அணிக்குக் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அஸ்வினின் வெளியேற்றம் இந்த நிகழ்வுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

மொத்தத்தில், அஸ்வினின் தனிப்பட்ட ஆட்டம், அணியின் மறுகட்டமைப்புத் திட்டம் மற்றும் தொழில்முறை காரணங்கள் என பல விஷயங்கள் இந்த முடிவுக்குப் பின்னால் உள்ளன. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியாக இருந்தாலும், அணியின் எதிர்கால நலனுக்கான ஒரு மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.