Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அசோக் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் நடிகர் விஜய்யுடன் நடனமாடிய டான்ஸ் மாஸ்டர் உள்பட 12 பேர் கைது

சென்னை: அசோக் நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் நடிகர் விஜய்யுடன் ‘கோட்’ திரைப்படத்தில் நடனமாடிய டான்ஸ் மாஸ்டர் உள்பட 12 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தாம்பெட்டமின், 2 கெட்டமைன், 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அசோக் நகர் பகுதியில் போதை பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக சென்னை வடக்கு மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையிலான குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு போதை பொருள் விற்பனை செய்யும் யுவராஜ் என்பவர் மூலம் போதை பொருள் கேட்டுள்ளனர். அதற்கு, யுவராஜ் போதை பொருளை பிரவீன் என்பவரிடம் கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். அதன்படி, அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜனை கோயில் தெருவில் தனிப்படையினர் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சொன்னபடி பிரவீன் மெத்தாம்பெட்டமினுடன் வந்தார்.

அப்போது தனிப்படையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 2 கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பிரவீனிடம் விசாரணை நடத்திய போது, வடபழனி மேற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் என்றும், தற்போது சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவர் நடிகர் விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் குழு நடனமாடியது தெரியவந்தது.

இவர் சினிமா துறையில் போதை பொருள் கேட்கும் சக கலைஞர்களுக்கு போதை பொருள் விற்று வந்ததும் தெரிவந்தது. போதை பொருளை நடன கலைஞர் பிரவீன் தன்னுடன் தனியார் கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு பிபிஏ படித்த நண்பரான யுவராஜ் மூலம் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து தனிப்படையினர் வடபழனி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரியில் தற்போது பி.காம் படித்து வரும் பரத் (22) என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி தனியார் வங்கியில் பணியாற்றி வரும் யுவராஜ் (27) மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வரும் லோகேஷ் குமார் (21), தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வரும் விக்னேஷ்வரன் (22), சம்பத்குமார் (21), தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்து வரும் ரகு (25) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ரகு படித்துக்கொண்டே சினிமா நடன கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கைது செய்யப்பட்ட சினிமா நடன கலைஞர் பிரவீன் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தாம்பெட்டமின், 2 கிராம் கெட்டமைன், 6 எல்எஸ்டி ஸ்டாம், 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சிக்கியுள்ளனர். அவரை கைது செய்யும் பணியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.