Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஷஸ் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்; அக்ரம் சாதனை ஸ்டார்க் சமன்

பிரிஸ்பேன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. இரண்டாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ெவன்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 5 ஆக இருந்தபோது, பென் டக்கெட் மற்றும் அடுத்து வந்த ஆலிவர் போப் ஆகியோர், அடுத்தடுத்து ஸ்டார்க் பந்தில் டக் அவுட் ஆகினர். பின்னர், வந்த ஜோ ரூட், ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிவந்த இந்த இணை, 117 ரன் சேர்த்து பிரிந்தது. அணியின் ஸ்கோர் 122 ரன்னாக இருந்தபோது, ஜாக் கிராலி 76 ரன்னில் நேசர் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹாரி புரூக் (31), பென் ஸ்டோக்ஸ் (19), ஜேமி ஸ்மித் (0), வில் ஜாக்ஸ் (19), அட்கின்சன் (4), பிரைடன் கார்ஸ் (0) என இங்கிலாந்து வீரர்கள் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க், தனது துல்லியமான வேகப்பந்து வீச்சில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார். அதேசமயம் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 40வது சதத்தை பதிவு செய்தார். இதுவரை 160 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர், ஆஸ்திரேலியா மண்ணில் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135 ரன்னிலும், ஆர்ச்சர் 32 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட், நேசர், போலாண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

இந்த டெஸ்டின் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட், ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இந்த 2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி நேற்று அவரை சமன் செய்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். அவர் இதுவரை 26 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அடுத்தபடியாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 19 விக்கெட்கள், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெமர் ரோச் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.