அமெரிக்க டிரம்ப்புடனான சந்திப்பை தவிர்க்க ஆசியான் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்கவுள்ளார் இந்திய பிரதமர் மோடி..?
கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்றும், காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகவும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வருகின்ற அக். 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீபாவளிப் பண்டிகை காரணமாக பிரதமர் மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை, இருப்பினும் காணொலி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார் என்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும், பிகார் சட்டப்பேரவை பிரசாரத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆசியான் மாநாட்டில் நேரில் பங்கேற்பதை தவிர்த்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் என இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்திவரும் அமெரிக்கா, இந்திய பொருள்களின் இறக்குமதிக்கு 25 சதவிகிதம் வரி விதித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியா அமெரிக்க அதிகாரிகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப்புடன் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில் குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசிய பயணத்தை மோடி தவிர்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்திய வழக்கத்தின்படி, ஒரு நாட்டுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக் கொள்வார்கள்.