அருணாச்சல் எல்லையில் சீனாவின் அசுர வேக கட்டமைப்பு : இந்திய விமானப்படை மாஜி தளபதிகள் கடும் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையோரம், திபெத் பகுதியில் சீனா மிக பிரம்மாண்டமான முறையில் புதிய விமானப்படை தளம் ஒன்றை அமைத்திருப்பது, இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தியா - சீனா இடையேயான மெக்மோகன் எல்லைக் கோட்டிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திபெத்தின் லுன்சே விமான தளத்தில், 36 வலுவூட்டப்பட்ட விமான நிழற்கூரைகள், புதிய நிர்வாக கட்டிடங்கள் மற்றும் விமானங்களை நிறுத்துவதற்கான புதிய தளம் ஆகியவற்றை சீனா முழுமையாக கட்டி முடித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் முக்கிய பகுதியான தவாங்கில் இருந்து வெறும் 107 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான தளம், இந்தியாவிற்கு நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) எல்லையில் குவித்து, தாக்குதல் நடத்துவதற்கான கால அவகாசத்தை சீனா வெகுவாக குறைத்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி பி.எஸ். தனோவா கூறுகையில், ‘டோக்லாம் சம்பவத்தின் போதே கூறினேன், திபெத்தில் உள்ள விமான தளங்களில் வலுவூட்டப்பட்ட விமான நிழற்கூரைகளை சீனா கட்டத் தொடங்குகிறதோ, அப்போது அந்நாடு நம்முடன் ஒரு போருக்கு தயாராவதன் அறிகுறியாகும். லுன்சேவில் 36 பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டது, அடுத்த முறை ஏதேனும் மோதல் ஏற்பட்டால், சீனாவின் போர் விமானங்கள் அங்கிருந்தே இயக்கப்படும் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த பகுதிக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளை அவர்கள் ஏற்கனவே சுரங்கங்களில் சேமித்து வைத்திருக்கக்கூடும்’ என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விமான தள மேம்பாடு, சீனாவின் எதிர்கால போர் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், இந்தியாவிற்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என விமானப்படையின் முன்னாள் துணைத் தலைவர் அனில் கோஸ்லா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘வலுவூட்டப்பட்ட இந்த நிழற்கூரைகள், ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து விமானங்களை பாதுகாக்க வல்லவை. இதனால், ஏதேனும் போர் மூளும் பட்சத்தில், இந்த தளத்தை முடக்குவது இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கும். லுன்சே, டிங்ரி போன்ற தளங்கள் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மிக அருகில் இருப்பதால், சீன விமானப்படை சொத்துக்களை விரைவாக எல்லையில் குவிக்க முடியும்’ என்றார்.
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், லுன்சே தளத்தில் சி.எச்-4 ரக தாக்குதல் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்துள்ளன. சீனாவின் இந்த அசுர வேக ராணுவக் கட்டமைப்பிற்கு மத்தியில், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட உள்ள அதிநவீன ஸ்கை கார்டியன் ட்ரோன்கள், 2029ம் ஆண்டில்தான் பயன்பாட்டிற்கு வரும் என்பது, ஒன்றிய பாஜக அரசின் மெத்தனப் போக்கையும், தொலைநோக்குப் பார்வையின்மையையும் காட்டுகிறது. 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகும், எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதன் விளைவாக, இன்று பிராந்தியத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.


