சென்னை அரும்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை அரும்பாக்கத்தில் இன்று சென்னை மண்டலம் -2 இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்து சமய அறநிலையத்துறையில் 20 இணை ஆணையர் மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், நிர்வாக வசதிக்காக சென்னையிலுள்ள 2 மண்டலங்களை மூன்றாக பிரித்தும், திருவள்ளூர் மற்றும் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு 2 புதிய மண்டலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை-2 மற்றும் திருப்பத்தூரில் உதவி ஆணையர் அலுவலகங்களும், தலைமையிடத்தில் 8 உதவி ஆணையர் பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. சென்னை-1 மண்டல அலுவலகம் பாரிமுனையிலும், சென்னை-2 மண்டல அலுவலகம் அரும்பாக்கத்திலும், சென்னை-2 மண்டல அலுவலகம் மந்தைவெளியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சென்னை அரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையர் கி.பாரதிராஜா, செயல் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


