Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அருமனை அருகே இன்று காலை பரபரப்பு: வனத்தில் இருந்து தப்பிவந்து வீட்டுக்குள் புகுந்த பெண் மிளா

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வனத்தில் இருந்து தப்பி வந்த மிளா வீட்டிற்குள் புகுந்ததால், வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையல் செங்கிட்டவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (57). வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார். வீட்டின் பின்னால் சமையல் அறையுடன், விறகுகளை போட்டு வைப்பதற்காக ஒரு அறை கட்டியுள்ளார். இன்று காலை சுமார் 8 மணி அளவில் இப்ராகிம் மாமியார் சுபேதா வீட்டின் பின்னால் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பின்னால் வைத்து இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்கள் கீழே சிதறிகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபேதா விறகுகள் போட்டு வைக்கும் அறையை பார்த்துள்ளார். அங்கு ஒரு பசுமாடு நிற்பதை பார்த்து சத்தம்போட்டுள்ளார். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த இப்ராகிம் பின்னால் வந்து பார்த்துள்ளார். அப்போது தான் தெரியவந்தது, தனது வீட்டிற்குள் புகுந்து இருப்பது பசுமாடு அல்ல, வனத்தில் உள்ள மிளா என்று. வனத்தில் இருந்து வந்த மிளா மிரட்சியுடன் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து இப்ராகிம் களியல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனசரகர் முகைதீன் தலைமையில் வன ஊழியர்கள், கடையல் சமூகசேவை கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இப்ராகிம் வீட்டிற்குள் புகுந்த மிளா பெண் மிளா என்பதும், சுமார் 200 கிலோ எடை இருப்பதும் தெரியவந்தது. 3 வயதே ஆன பெண் மிளா வனத்தில் உள்ள செந்நாய்கள் விரட்டியதில் ஓடி வந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.

மிளாவின் கழுத்து பகுதியில் காயங்கள் உள்ளன. இதனால் வனத்தில் இருந்து தப்பி வந்த மிளா அந்த பகுதியில் பல்வேறு விளைநிலங்கள், வீடுகளில் உள்ள காம்பவுண்ட் சுவர்களை கடந்து, இப்ராகிம் வீட்டின் பின்னால் உள்ள சுமார் 6 அடி உயரம் உள்ள காம்பவுண்ட் சுவற்றை தாண்டி வந்ததால், காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.

மிளாவை பிடிப்பதற்கு வந்த வனத்துறையினர், அறையில் இருந்து மிளாவை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கினர். வீட்டை சுற்றி டைல்ஸ் பதிக்கப்பட்டு இருந்ததால், மிளா வழுக்கியது. இதனை தொடர்ந்து வனத்துறையினர், மிளாவை வெளியே கொண்டு வருவதை கைவிட்டனர். மிளாவை மிரள வைத்து பிடிக்க முயன்றால், அதன் கால்கள் உடையும் நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் வலையை கொண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவத்தால் கடையல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.