Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞர் குறித்து விமர்சனம், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் பேச்சு சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: தலைவரின் கண் அசைவுக்காகத்தான் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்; அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி

சென்னை: கலைஞர் குறித்து விமர்சித்தும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையிலும் பேசும் சீமான், தனது நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். தூத்துக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தூத்துக்குடியில் நேற்று அளித்த பேட்டி: கலைஞர் குறித்த சீமானின் பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது. கலைஞர் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். இளைஞர்களுக்காக முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவு தேர்வு ரத்து, கணினி கல்வி வளர்ச்சி என அவர் கொண்டு வந்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவரை பற்றி இழிவாக பேசுவதை திமுக கண்டிக்கிறது. கட்சி தலைவர் என்பவர், ஆதரவாளர்களோ நிர்வாகிகளோ தவறாக பேசும் போது கண்டிக்க வேண்டும். மாறாக கலைஞர் குறித்து பேசும் போது இவர் சிரித்து கொண்டு இருக்கிறார்.

அவர் வழி நடத்த தெரியாத நிலையில் இருக்கிறார். நமக்கு முன்பாக ஒன்று பேசுகிறார். பின்பு அந்த கருத்தை மாற்றி பேசுகிறார். கலைஞர் ஓய்வின்றி உழைப்பவர் எனவும், ஆளுமை எனவும் கலைஞர் மறைவின் போது தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். தற்போது வேறு விதமாக பேசுகிறார். திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கிறோம். முதல்வராக தலைவர் பொறுப்புடன் இருக்கிறார். ஆகவே பொறுமையாக இருக்கிறோம். அவதூறு குற்றச்சாட்டு சொல்லும் போது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., ‘சீமான் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் சாதி பேரை சொல்லி இழிவாக பேசுகிறார்’ என, அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஆனால் கருத்துரிமை பறிக்கப்படுவதாக சீமான் சொல்கிறார். பட்டியலின பட்டியலில் 15வது இடத்தில் அந்த சொல் இருப்பது சீமானுக்கும் தெரியும். திரைப்படத்தில் இந்த சொல்லை பயன்படுத்தியதற்காக சீமான் சில ஆண்டுகளுக்கு முன்பு வருத்தம் தெரிவித்ததை அனைவரும் அறிவார்கள். ஆனாலும் வாய்க்கு வந்தது போல் பேசி இருக்கிறார்கள். மீண்டும் அதே கருத்தை பேசி கைது செய்து பாருங்கள் என சீமான் பேசுவது, ஒரு தலைவருக்கான பண்பு இல்லை. சாதி, மத ரீதியிலான பிரச்னைகளை உருவாக்கும் வகையில் சீமானின் பேச்சு இருக்கிறது. “நாமெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் என நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் ஆகி நீண்டகாலம் ஆகி விட்டது” என ஒரு அறிக்கையில் பழி சொல்லி பேசி இருக்கிறார்.

தூய்மைப்பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் என பேசி இருக்கிறார். தமிழ், தமிழ்குடி என பேசும் இவர்கள் எப்படி சாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிறார்கள்? சட்டம் -ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் அவர் பேசுவதை திமுக கண்டிக்கிறது. இன்று ஒன்று பேசுகிறார். அடுத்தாண்டு மாற்றி பேசுகிறார். ஆகையால் அவரது மனநிலையை சோதித்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்டம்- ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் அமைகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாததை அடுக்கு மொழியில் பேசி தமிழ் சமுகத்தை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.

கட்சி நடத்த எங்கிருந்து அவர் பணம் வாங்குகிறார் என அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி உலகளவில் நன்கொடையை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை காட்டிக் கொள்வதற்காக திமுகவையும், தலைவரையும் அவதூறாக பேசுவதாக தெரிகிறது. சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார். பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார். சீமான் அரசியல் தலைவருக்கே தகுதியானவர் அல்ல. எங்களது தலைவர் குறித்து பேச அவருக்கு அருகதை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.